137 நாட்களுக்கு பிறகு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில், ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 2 ரூபாய் 27 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 28 காசுகளும் உயர்ந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்வதால், எரிபொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்பதால், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகக் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், பெட்ரோல், டீசல் விலை நான்கு மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே காரணம் என்றார். எனினும் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
Read More : தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில், எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில், எம்.எல்.ஏ மற்றும் ஆளுங்கட்சியின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Must Read : சைவ உணவு மட்டும்தான்..! இலவச கழிப்பிடம் - அரசு பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த புதிய நிபந்தனைகள்
அப்போது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வைக் கண்டித்து சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில், சூரிய வெளிச்சத்திலேயே உணவு சமைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.