கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தக சிலிண்டரின் விலை புதன்கிழமை 40 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 240 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சிறிய டீக்கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சிலிண்டர் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து, தேனீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை ஏற்றத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பத்திரங்களை வழங்கியதே காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இது உண்மையல்ல என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வை குறைக்க நாள்தோறும் கூடுதலாக ஒரு மில்லியன் பீப்பாய், கச்சா எண்ணெய் விடுவிக்கப்படும் என அதிபர் பைடன் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விலையை குறைக்கவும், உலக அளவில் தட்டுப்பாட்டை போக்கவும் அதிபர் ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, தினமும் ஒரு மில்லியன் பீப்பாய், கச்சா எண்ணெய் என்ற வீதத்தில், தொடர்ந்து 6 மாதங்களுக்கு 180 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க பைடன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த நவம்பரில் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை அமெரிக்கா விடுவித்திருந்தது அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
Must Read : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25% முதல் 150% வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று மாற்றம் இன்றி முந்தைய நாளின் விலைக்கே விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 108.21 ரூபாயாக்கும், ஒரு லிட்டர் டீசல் 98.21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.