நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.5 ரூபாயும், டீசல் விலை 6.9 ரூபாய் உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றங்கள் இருந்த நேரத்தில் கூட, பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் காணப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒருபீப்பாய் 140 டாலராக இருந்தது.
இந்நிலையில், 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 22ம் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை உயரத்தொடங்கியது. எனினும் அப்போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115.62 டாலர் என்ற அளவில்தான் இருந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து 107.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து 97.52 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இதனால், நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, தலைநகர் டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் காங்கிரஸ் எம்பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கோயம்பேடு அருகே குவிந்த காங்கிரஸ் கட்சியினர், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.
கேரளாவில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எரிவாயு சிலிண்டருக்கும் வாகனங்களுக்கும் மாலை அணிவித்து, விலை உயர்வை திரும்ப பெற கோரி முழக்கங்களை எழுப்பினர்.
Read More : சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுடன் பயனர்களுக்கு காத்திருக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி
டெல்லியில் தேசிய மாணவர் சங்கத்தினரும் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். தேசிய மாணவர் சங்கத்தினர் பெட்ரோலிய அமைச்சகத்தின் முன்பும், மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வாயில் அருகிலும் மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களில் சிலரை போலீசார் கைது செய்தனர்.
Must Read : சிக்னலை கூட மதிக்கிறதில்ல... ஒரே நாளில் 978 டெலிவரி பாய்ஸ் டிராபிக் போலீசிடம் சிக்கினர்..
இதேப்போல் மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில், மாநில தலைவர் கமல்நாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டகாரர்கள் பாத்திரங்களை தட்டி கவனத்தை ஈர்த்த்னர்.
கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சீத்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். எரிவாயு சிலிண்டர்களுக்கு மாலையிட்டு அவர்கள் தங்களது எதிர்ப்பை காட்டினர். பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.