Home /News /business /

பர்சனல் லோன் வாங்குறது ரிஸ்க் இல்லை.. இதையெல்லாம் தெரிஞ்சுக்காமா இருந்தா தான் ரிஸ்கே!

பர்சனல் லோன் வாங்குறது ரிஸ்க் இல்லை.. இதையெல்லாம் தெரிஞ்சுக்காமா இருந்தா தான் ரிஸ்கே!

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

பர்சனல் லோனின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, கடன் தொகையைப் பயன்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

    பர்சனல் லோனை எதிர்பாராத நேரத்தில் பெரிய செலவுகள் வரும் போது, அல்லது திட்டமிட்டு சில செலவுகளை மேற்கொள்ள, பொருட்களை வாங்க பலரும் பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர்.

    வங்கிகள் மட்டுமின்றி, பல்வேறு நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வழங்குகின்றன. அதே போல, வாகனங்கள் வாங்குவதற்கும் தற்போது வாகனக் கடன்களை (vehicle loan) வங்கிகள் வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் வாகனத்துக்கு ஏற்றவாறு, கடன்களும் பல விதமாக உள்ளன. உதாரணமாக, நீங்கள் பைக் வாங்க விரும்பினால், 2 வீலர் லோன் கிடைக்கும், கார் வாங்க விரும்பினால், கார் லோன் கிடைக்கும்.

    சில காலங்களுக்கு முன்பு, வாகனம் வாங்குபவர்களுக்கு கடன் கிடைக்காமல், கார் வாங்குவதற்காக பெர்சனல் லோன் வாங்கும் பழக்கம் இருந்தது. தனி நபர் கடனை எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம். ஆனால் கார் கடனை கார் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த இரண்டு கடன்களுக்குமான வேறுபாடுகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

    தனிநபர் கடனின் அம்சங்கள்

    தனிநபர் கடனின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, கடன் தொகையைப் பயன்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கடன் தொகையை எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி, மாதாந்திர தவணைகளை உங்கள் வசதிகேற்றவாறு அமைத்துக் கொள்ளும் விருப்பமும், தள்ளுபடிகளும் இருக்கும். எந்த செக்யூரிட்டி டெப்பாசிட்டும் இல்லாமல் நீங்கள் வருமானத்தின் அடிப்படையிலேயே நீங்கள் எளிதாகக் கடன் பெற முடியும். குறைந்தபட்ச கடன் தொகையாக நீங்கள் ரூ.50,000 கூட வங்கியில் பெறலாம்.

    இது பாதுகாப்பற்ற கடன் (unsecured loan) என்பதால், தனிநபர் கடன் அல்லது தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். கடனுக்கான உங்கள் தகுதியை தீர்மானிப்பதில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் மட்டுமே தனிநபர் கடனுக்கு நீங்கள் தகுதி பெற முடியும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அதிக கடன் மதிப்பெண்கள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகின்றன.

    எனவே, தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750க்கு குறைவாக இருந்தால், அதை மேம்படுத்துவதற்கான வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறலாம்.

    கார் கடனின் அம்சங்கள்

    கார் கடன்களுக்கு பொதுவாக குறைந்த வட்டி விகிதங்கள் இருக்கும். நீங்கள் மிக எளிதாக கார் கடனைப் பெறலாம். இது பாதுகாப்பான கடனாக (secured loan) இருப்பதால், சராசரி கிரெடிட் ஸ்கோர் உள்ள எந்தவொரு நபரும் கார் கடனுக்கு தகுதியுடையவர் ஆவார். நீங்கள் வாங்கும் வாகனமே கடனுக்கான பிணையமாக செயல்படுகிறது.
    நீங்கள் கார் கடன் வாங்கும்போது, காரின் விலையில் 10 முதல் 20 சதவிகிதம் வரை முன்பணம் செலுத்த வேண்டும். அனைத்து கடன் தொகைகளையும் முடித்த பின்னரே காரின் முழு உரிமையையும் பெற முடியும். வெவ்வேறு வங்கிகளின் கார் கடன்களை ஒப்பிட்டு உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் நல்லது.

    கார் கடன்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
    பெரும்பாலான கார் கடன்கள் காரின் ஆன்-ரோடு விலைக்கு சமமான கடன்களை வழங்குகின்றன. சில கார் கடன்கள் ஆன்-ரோடு விலையில் 100% வரை கடன்களை வழங்குகின்றன. அதாவது முன்பணம் செலுத்தாமல் கூட கார் கடனைப் பெறலாம். இந்தியாவில் பெரும்பாலான கார் கடன்கள் எல்லாமே பாதுகாப்பான கடன்கள் தான். ஏனென்றால், கடனுக்கான பிணையமாக கார் தானே செயல்படுகிறது.

    மற்ற வகை கடன்களுடன் ஒப்பிடும்போது கார் கடனைப் பெறுவது பொதுவாக மிகவும் எளிது. குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் கூட எளிதாக கார் கடன் பெறலாம். ஆனால் இதற்கு ஒவ்வொரு வங்கிக்கும் கார் கடன் வழங்குவதில் வெவ்வேறு கொள்கைகள் உள்ளன. இந்தியாவில் கார் கடன்கள் பெரும்பாலும் நிலையான வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. பல வங்கிகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் வட்டி விகிதங்களை தீர்மானிக்கின்றன. எனவே குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற அதிக கிரெடிட் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கார் கடன்கள் புதிய கார்களை வாங்குவதற்கு மட்டுமின்றி பயன்படுத்திய கார் வாங்குவதற்கும் கடன் பெறலாம்.

    பெரும்பாலான கடன்களைப் போலவே, 750க்கு மேல் அதிக கிரெடிட் ஸ்கோர் எப்போதும் சிறந்தது. ஆனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் 600க்கு மேல் இருந்தாலும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

    இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் வழங்கும் கார் கடன் வட்டி விகிதங்கள்

    · பேங்க் ஆஃப் பரோடா - 7.00%
    · கனரா வங்கி - 7.30%
    · ஆக்சிஸ் வங்கி - 7.45%
    · பெடரல் வங்கி - 8.50%
    · எஸ்பிஐ - 7.20%
    · ஐசிஐசிஐ வங்கி - 7.90%

    இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள்

    · பாரத ஸ்டேட் வங்கி - 9.60% முதல் 15.65%
    · ஐசிஐசிஐ வங்கி - 10.5% முதல் 19%
    · HDFC வங்கி - 10.5% முதல் 21.00%
    · யெஸ் வங்கி - 13.99% முதல் 16.99%
    · சிட்டி பேங்க் - 9.99% முதல் 16.49%
    · ஆக்சிஸ் வங்கி - 12% முதல் 21%
    · பாங்க் ஆஃப் பரோடா - 10.50% முதல் 12.50%
    · HSBC வங்கி - 9.75% முதல் - 15.00%

    கார் கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் ஆவணங்கள்
    கார் கடனுக்கான தகுதி அளவுகோல்கள் வெவ்வேறு வங்கிகளுக்கு வேறுபட்டதாக இருக்கும். சில பொதுவான அளவுகோல்கள் பின்வருமாறு,
    · விண்ணப்பதாரர் 18 முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்
    · குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.20,000 ஆக இருக்க வேண்டும்
    · தற்போதைய முதலாளியின் கீழ் குறைந்தது 1 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்
    · அரசு நிறுவனத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ பணிபுரிய வேண்டும் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும்

    இந்தியாவில் என்ன வகையான கார் கடன் கிடைக்கிறது?

    வணிக வாகனக் கடன் கிட்டத்தட்ட அனைத்து வகையான சிறிய மற்றும் நடுத்தர கார்களுக்கும் கிடைக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் கார் கடன்களில் ஸ்போர்ட்லெஸ் யூட்டிலிட்டி வாகனங்கள் (எஸ்யூவி) மற்றும் மல்டி யூட்டிலிட்டி வெஹிக்கிள்ஸ் (எம்யூவி) ஆகியவையும் அடங்கும். அது மட்டுமின்றி, நம் நாட்டில் கிடைக்கும் அனைத்து கார் கடன்களும் பாதுகாப்பான கடன்களாகும்.

    இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு, கார் கடன் வாங்குவதற்கு தனிப்பட்ட பிணையம் தேவையில்லை. ஆனால், உங்கள் ஆண்டு வருமானம் கார் வாங்கினால் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று வங்கி எதிர்பார்க்கும். அந்த அளவுக்கு உங்கள் வருமானம் இல்லை என்றால், நீங்கள் இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம் வழங்குபவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். கார் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் பொதுவாக 12 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Loan, Personal Loan

    அடுத்த செய்தி