டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Paytm கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால், பட்டியலிடப்பட்ட அன்றே, நிறுவனத்தின் பங்குகளின் விலை 27.25 சதவிகிதம் சரிந்தது. ஐபிஓ வெளியிட்ட வர்த்தகத்தின் முதல் நாளிலேயே பங்குகளில் மதிப்பு இவ்வளவு குறைந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சரிவு, இதுவரை இல்லாத மோசமான பங்குச்சந்தை வெளியீடாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் இப்போது பங்குகளின் விலை கிட்டத்தட்ட 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
Paytm இன் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகளை மும்பைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு, முதலீட்டைத் திரட்டுவதற்கு முடிவு செய்தது. ஒரு பங்கின் மதிப்பு ரூ. 2,150 என்ற அளவில் ரூ. 18,300 கோடியை பங்குகள் வழியே திரட்ட ஐபிஓவை, நவம்பர் 8 அன்று நிறுவனம் வெளியிட்டு, நவம்பர் 10 அன்று முடிவடைந்தது. பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடும் போதே அதன் மதிப்பு ரூ. 2,080 என சரிந்திருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து விலை சரிந்து, ஒரு பங்கின் மதிப்பு ரூ. 1806.65 ஆக மாறியது. அதே போல, தேசிய பங்குச் சந்தையிலும், பங்குகளின் விலை கிட்டத்தட்ட 16 சதவிகிதம் குறைந்தது. கடந்த வார நிலவரப்படி, ஒரு பங்கின் மதிப்பு ரூ. 1,560.80 ஆகும்.
தொடர்ச்சியாக பங்குகளின் விலை சரிந்ததை நேற்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, பங்கின் மதிப்பு மேலும் 10 சதவிகிதம் குறைந்து, ஒரு பங்கின் விலை ரூ. 1,360.30 ஆக இருந்தது. இதன் படி, ஐபிஓ அறிவிக்கப்பட்ட விலையில் இருந்து, கிட்டத்தட்ட 35 சதவிகிதம் பங்கின் பதிப்பு குறைந்துள்ளது. தேசிய பங்கு சந்தையின் நிலவரப்படி, பங்கின் மதிப்பு 40 சதவிகிதம் குறைந்து, ஒரு பங்கின் விலை ரூ. 1286.60 என்ற நிலையில் உள்ளது.
மீண்டும் பங்குகளின் விலை குறைந்ததை அடுத்து, Paytm பங்குகள் வைத்திருப்பவர்கள் பங்குகளை விற்கலாமா அல்லது பொதுவாக ஆரம்பத்தில் விலை குறையும் பின்னர் விலை அதிகரிக்கும் என்ற போக்கு உள்ளதால் விலையை அதிகரிக்கலாமா என்ற குழபத்தில் இருக்கலாம். கிட்டத்தட்ட 87 சதவிகிதப் பங்குகளை நிறுவனங்கள் வழியே முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர் என்றும், விலை குறைந்தாலும், நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்றும் கேஆர் சோக்ஸி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பரிவேட் லிமிடெட் நிறுவன நிபுணர் தேவன் சோக்சி தெரிவித்தார்.
GCL செகியூரிட்டிஸ் வைஸ் சேர்மேன் ரவி சிங்கால், Paytm லாபம் ஈட்டுமா என்பது தற்போது கணிக்க முடியாது. சந்தையில் நிறைய போட்டி இருக்கிறது. அது மட்டுமின்றி, IPO வைப் பொறுத்தவரை Paytm நிர்ணயித்த ஆரம்ப விலை மிகவும் அதிகம். எனவே தற்போது புதிய பங்குகளை வாங்க வேண்டாம். ஏற்கனவே வாங்கியவர்கள் விலை அதிகரிக்க காத்திருந்து, அதிகரித்தவுடன் விற்பனை செய்து வெளியேறி விடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Also read... பிஎம் கிசான் 10-வது தவணை தேதி: விவசாயிகள் இந்த 3 திட்டத்தின் பயன்களையும் பெறலாம்!
தற்போதைய வணிக மாடலில் அதிக லாபம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தெளிவாக காணப்படவில்லை. ஒரு பங்கின் விலையும் மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாத நிதி அறிக்கைகளை நிறுவனம் வெளியிட்டது. அறிக்கைகளின் படி, மொத்த வணிக மதிப்பு 131 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. Paytm வழியே கடன் வழங்குவது நிறுவனம் லாபம் ஈட்டியதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. முதன் முதலில் பங்குச்சந்தையில் பட்டியலிட்டால், பங்குகளின் விலை குறைவது இயல்பு தான் என்று நிறுவனத் தலைவர் விஜய் சேகர் சர்மா தெரிவித்திருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.