நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும், அமிதாப் காந்தின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு அடுத்ததாக பரமேஸ்வரன் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
63 வயதான பரமேஸ்வரன் ஐயர் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு விமானப் படை அதிகாரி. 1981ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய பரமேஸ்வரன், ஐநா, உலக வங்கி ஆகிய பல அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். 17 ஆண்டு காலம் ஐஏஎஸ் பொறுப்பில் பணியாற்றி பரமேஸ்வரன், 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு இவருக்கு மீண்டும் அரசு பொறுப்பு வழங்கப்பட்டது. குடிநீர் மற்றும் வடிகால் துறையின் செயலாளராக 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பரமேஸ்வரன், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூளையாக இருந்து செயல்பட்டார். நாடு முழுவதும் சுமார் 9 கோடி கழிவறைகள் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றிக்கு ஆணிவேராகக் கருதப்படுகிறார் பரமேஸ்வரன்.
கிராமப்புற வடிகால் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் நிபுணராக பணியாற்றியுள்ள பரமேஸ்வரன், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான ஆட்சியின் போது அம்மாநில கல்வித்துறையில் முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: ‘முதல்ல சாப்பிடு.. வேலைய அப்புறம் பாத்துக்கலாம், இல்லனா அடிச்சுருவேன்...’ மழலை மொழியில் ஆசிரியரை அன்பாக மிரட்டும் குழந்தை - வைரல் வீடியோ
பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்திற்கும் இவர் தலைமை பொறுப்பேற்று வழி நடத்தியுள்ளார். இது போன்ற பல்வேறு திட்டங்களில் சிறந்த அனுபவம் வாய்ந்த பரமேஸ்வரன் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டில் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. அதுவரை செயல்பாட்டில் இருந்த திட்டக் குழு கலைக்கப்பட்டு, புதிய அமைப்பான நிதி ஆயோக்கை உருவாக்கினார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Niti Aayog