Home /News /business /

பதற்றம் தரும் பாமாயில் விலை.. அதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பதற்றம் தரும் பாமாயில் விலை.. அதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பாமாயில்

பாமாயில்

Palm oil | சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கவும் பெரும்பாலும் பாமாயிலேயே பயன்படுத்தப்படுவதால், அவற்றின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

    இந்தோனேசியாவின் திடீர் முடிவால் இந்தியாவில் பாமாயில் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. இதனால், நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

    வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சமையல் எண்ணெய்களில் முதன்மையானது பாமாயில். 

    பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்மூரில் பெயர் எண்ணெய்ப் பனை. 

    மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு ஆண்டுக்கு 45 மில்லியன் டன் பாமாயில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதற்கடுத்த இடத்தில் உள்ள மலேசியாவில் 19 மில்லியன் டன்னும், தாய்லாந்தில் 3 மில்லியன் டன்னும் உற்பத்தியாகிறது.

    இந்தோனேசியா உற்பத்தி செய்யும் பாமாயிலில் 60 சதவீதத்தை வாங்குவது இந்தியாதான். அதற்காக, இந்தியாவில் பாமாயில் உற்பத்தி இல்லையா என்று கேட்டு விடாதீர்கள். பாமாயில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் 3 லட்சம் டன்களுடன் 18-வது இடத்தில் இருப்பது நமது இந்தியாதான்.

    இதையும் படிங்க - இந்தியாவில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.. மத்திய அரசு செக்!


    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா தொடங்கி அசாம், அந்தமான் வரை உள்பட 16 மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வளர்க்கப்படுகிறது எண்ணெய் பனை.


    தமிழ்நாட்டை பொறுத்தவரை தஞ்சை, திருச்சி, நாகை தொடங்கி வறட்சியான வேலூர், தருமபுரி வரை தற்போது 26 மாவட்டங்களில் பரவிக்கிடக்கின்றன பாமாயில் மரங்கள். ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் மகசூல் தரும் நிலையை அவை எட்டவில்லை.

    நடவு செய்த 4 ஆண்டுகளில் தொடங்கி, தென்னையைப் போல ஆண்டு முழுவதும் பலன் தரக் கூடியது பாமாயில் குலை. ஒரு ஏக்கரில் நிலக்கடலையைப் பயிர் செய்தால், அதில் இருந்து 300 கிலோ எண்ணெய் மட்டுமே கிடைக்கும். சூரியகாந்தியில் 500 கிலோ, எள்ளில் 150 கிலோ, தேங்காயில் 750 கிலோ அளவுக்கே எண்ணெய் கிடைக்கும்.. ஆனால், அதே ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 3 டன் எண்ணெய்த் தரக்கூடியது பாமாயில் மரம் மட்டுமே. 

    இந்த அபரிமிதமான வளர்ச்சியே அந்த எண்ணெய் நமக்கு மிகவும் மலிவாக கிடைக்க முதற்காரணம். பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலை என்பதாலேயே நியாய விலைக்கடைகளில் நமக்கு விநியோகம் செய்யப்படுகிறது பாமாயில்.

    இந்தியாவில் என்னதான் உற்பத்தி செய்யப்பட்டாலும், நம் மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை என்பதாலேயே கைகொடுக்கிறது இந்தோனேசியா..

    கொரோனா, உக்ரைன் - ரஷ்யா போரால் உலகமே திண்டாடி வரும் நிலையில், இந்தோனேசியாவும் அதிலிருந்து தப்பவில்லை. உள்நாட்டிலேயே பாமாயில் விலை கிடுகிடுவென ஏறியதால், அதை தடுத்து நிறுத்த ஏற்றுமதிக்கு தடை போட்டுள்ளது இந்தோனேசியா.

    இந்த முடிவுதான் இந்தியாவிலும் பாமாயில் விலையை உச்சத்தில் கொண்டு வைத்திருக்கிறது.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் ஏற்கெனவே சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது பாமாயில் விலையும் தன் பங்குக்கு உயர்ந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 140 ரூபாய் வரை இருந்த ஒரு லிட்டர் பாமாயில் விலை, இந்தோனேசியாவின் அறிவிப்பால் இப்போதே 170 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. அடுத்த வாரத்தில் பாமாயில் விலை லிட்டர் 200 ரூபாயைத் தொடும் எனக் கூறப்படும் நிலையில், விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இல்லத்தரசிகள். 

    சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கவும் பெரும்பாலும் பாமாயிலேயே பயன்படுத்தப்படுவதால், அவற்றின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், நம் நாட்டிலேயே அதிகம் கிடைக்கும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

    உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்ததைப் போல, இங்கு உற்பத்தியாகும் எண்ணெய் வித்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா சிறிது காலம் தடை விதித்தால், எண்ணெய் விலை மேலும் எகிறாமல் கட்டுக்குள் வரலாம். மக்களின் நலன் கருதி, இனி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசு தான். 

    - பெரிய பத்மநாபன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Refined oil

    அடுத்த செய்தி