அனைத்து பொருள்களுக்கான ஜி.எஸ்.டியையும் மத்திய அரசு உயர்த்த உள்ளது: ப. சிதம்பரம்

அனைத்து பொருள்களுக்கான ஜி.எஸ்.டியையும் மத்திய அரசு உயர்த்த உள்ளது: ப. சிதம்பரம்
  • Share this:
நிதிப்பற்றாக்குறையை கையாள தெரியாத மத்திய அரசு, அனைத்து பொருள்களுக்கான ஜி.எஸ்.டியையும் உயர்த்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பெரம்பலூரை சேர்ந்த ராஜிவ்காந்தி என்ற தொண்டர் வெங்காய மாலையுடன் சிதம்பரத்தை வரவேற்றார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், பெரும் வெற்றியை கொடுத்த மக்களுக்கு பாஜக அரசு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார். நிதிப்பற்றாக்குறையை கையாள ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளை அடித்துவிட்டு, அந்த பணத்தை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.


திறமையற்ற நிர்வாகி என பாஜக அரசை உலக புகழ் பெற்ற எக்கானமிஸ்ட் பத்திரிகை கூறியுள்ளதாகவும், இதனை மத்திய அரசு நாள்தோறும் நிரூபித்து வருவதாகவும் சிதம்பரம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் பல பிழைகள் இருப்பதாக கூறப்படுவதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விரைவில் அறிவிப்பார் எனவும் கூறினார்.
First published: December 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்