Home /News /business /

பட்ஜெட் 2021: ஏழைகள், நலிவுற்ற மக்கள் கைகளில் நேரடியாக ரொக்கத்தை அளிக்கும் நேரம் இதுவே: மோடி அரசுக்கு மணீஷ் திவாரி ஆலோசனை

பட்ஜெட் 2021: ஏழைகள், நலிவுற்ற மக்கள் கைகளில் நேரடியாக ரொக்கத்தை அளிக்கும் நேரம் இதுவே: மோடி அரசுக்கு மணீஷ் திவாரி ஆலோசனை

மணீஷ் திவாரி.

மணீஷ் திவாரி.

தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதாரத்தை அதன் அடித்தளத்தையே ஆட்டிவிட்டது. சேமிப்பு, நுகர்வு, முதலீடு, வேலைவாய்ப்பு என்று பல துறைகளும் அடி வாங்கியது.

  இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமெனில் தேவை அதிகரிக்க வேண்டும், அதற்கு மக்கள் கையில் பணம் இருக்க வேண்டும். குறிப்பாக ஏழை மற்றும் நலிவுற்ற, பின் தங்கிய மக்கள் கையில் அரசு நேரடியாக ரொக்கத்தை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

  இன்று மத்திய பட்ஜெட் 2021--22-ஐ தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது முதல் காகிதமில்லா பட்ஜெட் என்று வர்ணிக்கப்படுகிறது.

  இந்நிலையில் ஏசியன் ஏஜ் ஆங்கில இணையதளத்தில் மணீஷ் திவாரி எழுதிய பத்தியில் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு:

  1991-க்குப் பிறகு இந்தியா படுமோசமான பொருளாதார நெருக்கடியைத் தற்போது சந்தித்து வருகிறது. ஜிடிபி 37வது மாதமாக தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. தொடர்ந்து 4வது ஆண்டாக சரிவு கண்டு வருகிறது. இரண்டாவது காலாண்டில் 7.5% வரை பொருளாதாரம் சரிவு கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9% சரிவு கண்டது.

  தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதாரத்தை அதன் அடித்தளத்தையே ஆட்டிவிட்டது. சேமிப்பு, நுகர்வு, முதலீடு, வேலைவாய்ப்பு என்று பல துறைகளும் அடி வாங்கியது. இது போதாதென்று உடனேயே படுமோசமாக ஜிஎஸ்டியும் அமல் படுத்தப்பட்டது.

  2019-20 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் வர்த்தகத்துறைகளுக்கான நிதிவரத்து, நிதி ஓட்டம் 88% சரிவு கண்டது. ஆர்பிஐ தகவல்களின் படி வங்கிகளிலிருந்து வங்கிகள் அல்லாத மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு சென்ற ரொக்கம் ஏப்ரல்-செப்டம்பர் 2019-20-ல் ரூ.90,995 கோடியே, மாறாக இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூபாய் 7 லட்சத்து 36 ஆயிரத்து 87 ஆக இருந்தது.

  பிறகு வந்தது திட்டமிடப்படாத கொரோனா லாக் டவுன் மார்ச் 2020-ல்.... இந்நிலையில் அன்று அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை பொருளாதார நோய்க்கூறுகள் அனைத்திற்கும் கொரோனாவைக் குற்றம்சாட்டி தப்பிக்கும் போக்குதான் தெரிகிறது. ஆனால் அதே வேளையில் கொரோனாவுக்கு எதிராக சிறந்த நடவடிக்கை எடுப்பதும் நாங்கள்தான் என்று அரசு தனக்குத்தானே ஷொட்டு கொடுத்துக் கொள்கிறது. இது உண்மையல்ல, இந்திய மக்கள் பிழைத்தார்களென்றால் அது அவர்களது உடல் நோய் தடுப்பாற்றலினால்தான்.

  அடுத்த ஆண்டில் ஜிடிபி 11% என்று பொருளாதார ஆய்வறிக்கையும் தவறாக வழிநடத்துகிறது. -7.7%லிருந்து எப்படி 11%-க்கு முன்னேறும்? பொருளாதார முன்னெற்றத்துக்காக அரசு அறிவித்த நிவாரண பேக்கேஜ் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. ஏப்ரல் 2020 முதல் நவம்பர் 2020வரை அரசு வருவாய் 18% குறைந்து 1,81,372 கோடி குறைந்துள்ளது...

  மொத்தத்தில் இந்தியா தற்போது இருக்கும் நிலையில் எங்கு செல்லும்? 1929-1939-ல் அமெரிக்காவை உலுக்கிய மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை தீர்க்க அதிபர் ரூஸ்வெல்ட் கையாண்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அவர் சிறு, குறுதொழில்கள் முதல் அனைத்திற்கும், உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட சகல வசதிகளைப் பெருக்கி வேலை வாய்ப்பை பெருக்க முயன்றார்.

  அதுபோலவே நம் புதிய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டுமெனில் பொருளாதாரத்தில் பணத்தை நேரடியாக மக்கள் கையில் கொடுப்பதில்தான் இருக்கிறது. மேலும் விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்று கிராமங்களில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

  இறுதியாக அரசு ஏழைகள் மற்றும் நலிவுற்றப்பிரிவினரிடையே பணத்தை நேரடியாகக் கொண்டு செல்வதுதான் ஒரே வழி, அப்போதுதான் அவர்கள் பொருளாதாரமும் முன்னேறும், வாங்கும் சக்தி அதிகரிக்கும், தேவை பெருகும். புதிதாகச் சிந்தித்து புதிதாகச் செயல்பட இதை விட சிறந்த காலம் வேறு எதுவும் அமையாது.

  இவ்வாறு கூறியுள்ளார் மணீஷ் திவாரி.
  Published by:Muthukumar
  First published:

  Tags: 2021 BUDGET EXPECTATIONS, Budget 2021, Budget Session, Union Budget 2021

  அடுத்த செய்தி