GST Council Meet| கரும்பூஞ்சை நோய் மருந்துகளுக்கு வரி விலக்கு; ரெம்டெசிவிர், வென்டிலேட்டருக்கு 5% ஆக ஜிஎஸ்டி குறைப்பு!

நிர்மலா சீதாராமன்

கொரோனா தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் 5% ஜிஎஸ்டி நீடிக்கிறது.

  • Share this:
    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேவையான மருந்துகள், சில மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி குறைப்பு முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், வென்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த மாதம் 29ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி விலக்கு அளிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அதில் எந்த இறுதி முடிவுகளும் எடுக்கப்படாமல் இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளை பாதிக்கும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி டோசிலிசுமாப் மற்றும் ஆம்போடெரிசின் - பி உள்ளிட்ட மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து, மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனை கிட், பல்ஸ் ஆக்சிமீட்டர், வெண்டிலேட்டர் மாஸ்க் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் 5% ஜிஎஸ்டி நீடிக்கிறது.

    அதேபோல், ஆர்டி-பி.சி.ஆர் இயந்திரங்கள், ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் மரபணு வரிசைமுறை இயந்திரங்கள் போன்ற சிலவற்றுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    மேலும், சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாகவும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 12% ஆக குறைக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பானது வரும் செப்டம்பர் மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்த காலக்கெடுவை நெருங்கும் நேரத்தில் மேலும் வரிகுறைப்பை நீட்டிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published: