வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த காலக்கெடுவுக்குள் பெரும்பாலான கணக்கு தாக்கல்கள் வந்து சேர்ந்துவிடும் என்று மத்திய அரசு கருதுகிறது. இத்தகைய சூழலில் கடைசி தேதியை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
2021 - 2022 நிதியாண்டில் ஜூலை 20ஆம் தேதி நிலவரப்படி 2.3 கோடி வருமான கணக்கு தாக்கல்கள் வரப்பெற்றுள்ளன என்று மத்திய வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார். தொடர்ந்து கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார். முன்னதாக, 2020 - 2021 நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டில் மொத்தம் 5.89 கோடி கணக்கு தாக்கல்கள் வரப்பெற்றன.
இதுகுறித்து தருண் பஜாஜ் மேலும் கூறுகையில், “வழக்கம்போல இப்போதும் தேதி நீட்டிக்கப்படும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆகவே, தொடக்கத்தில் கணக்கு தாக்கல் செய்பவர்களின் வேகம் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது நாளொன்றுக்கு சராசரியாக 15 லட்சம் முதல் 18 லட்சம் கணக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை 25 லட்சம் முதல் 30 லட்சமாக அதிகரிக்கக் கூடும்.
Also Read : இப்படி ஒரு விஷயத்துக்காக பேங்கில் லோன் கிடைக்குமா! இத்தனை நாள் தெரியாம போச்சே
பொதுவாக, கணக்கு தாக்கல் செய்பவர்கள் பலர் கடைசி நாளன்று அதை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த முறை கடைசி நாளன்று 9 சதவீதம் 10 சதவீதம் வரையிலான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல, இந்த முறையும் கடைசி நாளன்று சுமார் ஒரு கோடி வரையிலான கணக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றூ எதிர்பார்க்கிறோம்’’ என்றார் அவர்.
சட்ட விதிகள் கூறுவதென்ன
வருமான வரி சட்ட விதிகளின்படி, வரி செலுத்தும் தனிநபர் ஒருவரின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டியதில்லை என்ற சூழல் இருக்குமானால், அவர்கள் தங்கள் கணக்குகளை ஒவ்வொரு நிதியாண்டிலும் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.
வருமான வரி கணக்கு தாக்கல் மூலமாக ஒரு நபர், தனக்கான வருமானம் மற்றும் தான் செலுத்திய வரி ஆகியவை குறித்து வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்துகிறர்.
மொத்தம் 7 விதமான தாக்கல்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம் 7 விதமான படிவங்களை வருமான வரித்துறை வழங்குகிறது. ஒருவர் எந்த அடிப்படையில் வருமானம் பெறுகிறார், என்ன மாதிரியான வரியை செலுத்துகிறார் என்பதைப் பொறுத்து அவர் தனது படிவத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். வருமான வரி இணையதளத்தில், ஒரே சமயத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கணக்கு தாக்கல் செய்யும் அளவில் தொழில்நுட்ப ரீதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், ஆகவே காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் தருண் பஜாஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏற்கனவே 2.3 கோடி கணக்குகள் எந்தவித சிக்கலும் இன்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நாளொன்றுக்கு 50 ஆயிரம் கணக்குகள் வந்து கொண்டிருந்தன. தற்போது 20 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் வர தொடங்கியுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார் அவர்.
கொரோனா காரணமாக…
முந்தைய இரண்டு நிதியாண்டுகளில், கொரோனா பெருந்தொற்று காலம் நிலவியதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்தது. ஆனால், இந்த முறை கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.