முகப்பு /செய்தி /வணிகம் / வருமானவரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம்: இனி யார், எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? - முழு விபரம்!

வருமானவரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம்: இனி யார், எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? - முழு விபரம்!

வருமான வரி உச்சவரம்பு

வருமான வரி உச்சவரம்பு

New Income Tax Slabs 2023-24 | ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  ஏற்கனவே 6 வரம்புகளில் இருந்த வரி விதிப்பு முறை வரும் நிதியாண்டில் 5 ஆக குறைக்கப்படுகிறது.  இதன்படி, 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற அளவு 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வருமான வரி விலக்கு உச்ச வரம்பு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.  மேலும், 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு 10 சதவீதமும்,  9 முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் 15 சதவீதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் 20 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.  15 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வருமான வரி செலுத்துவதற்கு புதிய வரி முறையை தானாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பழைய முறைக்கு மாற விரும்புவோர் மாறிக் கொள்ளலாம் என்றும் நிதியமைச்சர் கூறினார். வருமான வரி கணக்குகளை சரிபார்ப்பதற்கான கால அவகாசம் 93 நாட்களில் இருந்து 16 நாட்களாக குறைக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிச் சலுகையின் படி, 9 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் 45 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். இது அவர்களின் ஆண்டு வருமானத்தில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆகும்.

தற்போது 9 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் பெறுவோர் 60 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்தி வருகின்றனர். இதேபோன்று 15 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் பெறுவோர் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் வரி செலுத்தி வரும் நிலையில், புதிய வரி விதிப்பின்படி ஒன்றரை லட்சம் ரூபாய் வரி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Union Budget 2023