மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விரைவில் இந்தியாவில் பெட்ரோலுக்கு முடிவு கட்டப்பட இருப்பதாக அதிரடியாக தெரிவித்தார்.
அவரது பேச்சு பெட்ரோல்-டீசல் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் இனி பயோ-எத்தனால் எரிபொருளுக்கு முக்கியத்தும் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், வாகன இயக்கத்திற்கான பசுமை ஹைட்ரஜனைத் தயாரிக்கும் பணிகளும் நாட்டில் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவற்றையே முக்கிய எரிபொருளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக வழக்கமான பெட்ரோல் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும் என அரசு நம்புகிறது.
ஏற்கனவே, அரசு வாகன உற்பத்தியாளர்களிடம் flex-fuel என்ஜின் கொண்ட வாகனங்களை உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, கூடிய விரைவில் பெட்ரோல் வாகனங்களுக்கு பிரியா விடை கொடுக்கும் நிலை நாட்டில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எத்தனால் என்றால் என்ன?
அமைச்சரின் இந்த பேச்சால் பலரிடையே எத்தனால் என்றால் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம். எத்தனால் என்பது, கரும்பு சக்கை, சேதமடைந்த உணவு மற்றும் கோதுமை, உடைந்த அரிசி, விவசாய கழிவுகள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் ஆல்கஹால் வகையை சேர்ந்ததாகும்.
ஹோட்டல், ரெஸ்டாரண்ட் பில்லில் சேவை வரி இருந்தால் செலுத்த வேண்டாம் - மத்திய அரசு உத்தரவு
எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் என இது அழைக்கப்படுகின்றது. உலகளவில், கரும்பு தயாரிப்பில் இரண்டாவது பெரிய நாடு, இந்தியா தான் என்பதால், இந்த முறையால், பல விவசாயிகள் பயன்பெற முடியும் என கூறப்படுகிறது.பெட்ரோலில் எத்தனால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையுமென்றும், இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையுமென்றும் மத்திய அரசு கூறி வருகிறது.
மேலும், எத்தனாலுக்கு உயர் எரி திறனும் உள்ளது. இது ஓர் கரிம ரசாயன (organic chemical) கலவையாகும். இருப்பினும், பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, அதிக ஆக்டேன் எண் மற்றும் குறைவான உமிழ்வு ஆகிய உள்ளீட்டு பண்புகளை இது கொண்டிருக்கிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் உலகில் உள்ள பல நாடுகளில் விற்கப்படுகின்றன.
இந்தியாவிலும் விரைவில் அது பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் மேலே கூறப்பட்ட தகவல்களை வெளியிட்டிருக்கின்றார். அதே வேளையில் ஏற்கனவே சில வாகனங்கள் எத்தனால் கலந்த பெட்ரோலுக்காக தயார் நிலையில் இருக்கின்றன.
எத்தனை சதவீதம் பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படும்?
பல்வேறு நிலைகளில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுகின்றன. இருப்பினும், E90 மற்றும் E85 ஆகிய இரு முறைகளே பிரபலமானதாக உள்ளன. 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதை இவை உறுதிப்படுத்துகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் E90 என்பது 90 சதவீதம் பெட்ரோலும், 10 சதவீதம் எத்தனால் என்பதையும், E85 என்பது 85 சதவீதம் பெட்ரோலும், 15 சதவீதமும் எத்தனால் என்பதையும் குறிக்கும்.
அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் E70-E75 நிலைகளில் எத்தனால் கலக்கப்படுகிறது. 98 சதவீதம் பெட்ரோல் 2 சதவீதம் எத்தனால் என்கிற முறையிலேயே எத்தனால் கலப்படம் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10 சதவீதமாக அது அதிகரிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான நாடுகள் அதை 10 சதவீதமாக உயர்த்தியிருக்கின்றன.
எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
எத்தனால் பெட்ரோலை விட விலை குறைவு. எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ. 61 ஆக உள்ளது. இதனை பெரும்பகுதியாக பெட்ரோலில் பயன்படுத்தும்போது அதன் விலை பல மடங்கு குறைவாகும். மேலும், வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வதையும் இதன் வாயிலாகக் குறைக்க முடியும். இவையே எத்தனால் பயன்பாட்டினால் ஏற்படும் முக்கிய நன்மைகள் ஆகும். சிம்பிள் எந்த அளவுக்கு எத்தனால் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு பெட்ரோல் விலையானது குறையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Diesel, Petrol