வெளி நாடுகளில் டிஜிட்டல் கரன்சி உபயோகம் பரவி வரும் நிலையில், இந்தியாவில் சொந்தமாக மத்திய அரசு டிஜிட்டல் கரன்சிகளை கொண்டு வரும் என்று கூறியுள்ள நிதியமைச்சர் நிர்மலா அதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக நிர்மலா சீதாராமன் நெட்வொர்க் 18 செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நெட்வொர்க் 18 தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் போஸ் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில் விபரம்-
வெகு விரைவிலோ அல்லது சற்று தாமதமாகவோ மத்திய அரசு டிஜிட்டல் கரன்சியை சொந்தமாகவே கொண்டு வரும். இது தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
டிஜிட்டல் கரன்சிகளை கைளாளுவது எளிதானது. அதே நேரம் ரூபாய் நோட்டுக்களை விட நல்ல பலன்களைத் தரும். இதுதொடர்பான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் ரூபாய் திட்டம் இறுதி வடிவத்தை ஏற்படுத்திய பின்னர், அது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி வங்கியுடைய பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசு கொண்டு வரவுள்ள கரன்சி, மற்ற தனியார் விர்ச்சுவல் கரன்சிகளைப் போல் இருக்காது.
எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தாத வகையில் மத்திய அரசு டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறது. இதுதொடர்பான அனைத்து முயற்சிகளையும் மிகுந்த கவனத்துடன் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.
தனி நபர்கள் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்குவதை நாம் கரன்சியாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது முறைப்படி ரிசர்வ் வங்கி மூலமாக நடைபெற்றால்தான் கரன்சியாக வடிவம் பெற முடியும். அதனால்தான், இந்த நடவடிக்கை நாடாளுமன்றத்தின் வழியே நிறைவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிரிப்டோ கரன்சி குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், இந்தியாவில் கிரிப்டோ கரன்சி மீதான மோகம் அதிகரித்திருப்பது கவலை கொள்ளச் செய்வதாக கூறியிருந்தார். பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் என்ற அடிப்படையில், கிரிப்டோ கரன்சியின் பரவலை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.