தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் குறைவு... புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தால் என்ன நடக்கும்?

கோப்புப் படம்

சமூக பாதுகாப்பு அம்சங்களுக்கான பங்களிப்பு அதிகரிப்பதால், தொழிலாளர்களுக்கு 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மாதந்தோறும் பெறப்படும் ஊதியம் குறையும்.

 • Share this:
  தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு அமலுக்கு வர உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளத்தின் அளவு குறையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேறியது. இதில், ஊதிய சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், ஊக்கத்தொகை சட்டம், சமமான ஊதிய சட்டம் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

  இது அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதியின்படி, தொழிலாளர்களுக்கான படிகள் என்பது 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் என்பது 50 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தப்படுகிறது.

  இதன் காரணமாக, நிறுவன உரிமையாளர்களுக்கான செலவு அதிகரிப்பதுடன், தொழிலாளர்கள் மாதந்தோறும் பெறும் நிகர ஊதியம் குறைய உள்ளது. அதாவது, சமூக பாதுகாப்பு என்ற முறையில் அடிப்படை ஊதியத்தில் தலா 12 சதவீதத்தை தொழிலாளர்களும், உரிமையாளர்களும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைக்கு வழங்க வேண்டும்.

  சமூக பாதுகாப்பு அம்சங்களுக்கான பங்களிப்பு அதிகரிப்பதால், தொழிலாளர்களுக்கு 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மாதந்தோறும் பெறப்படும் ஊதியம் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிறுவன உரிமையாளர்கள் தங்களது தொழிலாளர்களின் ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டிவரும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

  அதேநேரம், வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான பங்களிப்பு இல்லாத உயர் வருவாய் பிரிவினருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. இதனிடையே, இந்த புதிய விதிகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒருதரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

  மத்திய அரசு வியாழக்கிழமை நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, சில தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால், திட்டமிட்டபடி புதிய விதிகள் அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: