புதிய நிதியாண்டு தொடங்கியதைத் தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகள், கார் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீதம் வரி வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால், அதற்கு கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்பட உள்ளது. வீடு வாங்குவோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பட்டியலிடப்பட்ட 800 க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், காய்ச்சல், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்ற பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் பாரசிட்டமால், அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது.வாகன தயாரிப்புக்கான உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட முக்கிய உலோக பொருட்கள் விலை உயர்ந்திருப்பதை அடுத்து வாகனங்களின் விலையை கார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
டோயோட்டா கார் நிறுவனம் 4 சதவீதம் வரையிலும், பிஎம்டபள்யு இந்தியா நிறுவனம் மூன்றரை சதவீதம் வரையிலும் தங்களது கார் விலையை உயர்த்தியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்கள் விலை 2 முதல் 2.15 சதவீதம் உயர்ந்துள்ளது.உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு விலை இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதன்மூலம் வாகனங்களுக்கு பயன்படும் சிஎன்ஜி கேஸ், குழாய் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் கேஸ் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சமையல் சிலிண்டர் விலை உயரக்கூடும்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.