ஏப்ரல் 1ம் தேதி வியாழக்கிழமை முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது. கடந்த மாதம் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புகளையும், புதிய மாற்றங்களையும் அறிவித்திருந்தார். வருமானவரி கணக்கு தாக்கல் முதல் டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வரை புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
வரி செலுத்துவதில் புதிய முறை
2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது புதிய வரி முறையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை என இரண்டும் அமலில் இருக்கும். தங்களின் வசதி மற்றும் சலுகைகளுக்கு ஏற்ப இரண்டு வரி முறைகளில் ஒன்றை, தங்களின் விருப்பப்படி வரி செலுத்துபவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த புதிய வரி நடைமுறை தற்போது (ஏப்ரல் 1 முதல்) நடைமுறைக்கு வந்துள்ளது.
இ.பி.எப் முதலீடு
பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருங்கால வைப்பு நிதியில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு புதிய மாற்றங்களை அறிவித்தார். வருங்கால வைப்பு நிதியில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானதுக்கு வரி விகிதம் உண்டு என கூறியிருந்தார். அதனால், வருங்கால வைப்பு நிதி மூலம் முதலீடு செய்து வருவாய் ஈட்டியவர்கள், 2.5 லட்சத்துக்கும் மேலான முதலீடுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
டி.டி.எஸ்/டி.சி.எஸ் தாக்கல்
ஒருவர் பல வழிகளில் வருமானம் ஈட்டும்போது அவர் பெறும் தொகைக்கு வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. இது டி.டி.எஸ் (Tax Deducted at Source) எனப்படும். அது போல ஒரு வியாபாரி குறிப்பிட்ட பொருள்களை விற்கும்போது டி.சி.எஸ் (TCS -Tax Collected at Source) வசூல் செய்யப்படுகிறது. 2021 மத்திய பட்ஜெட்டில் இது போல ரூ.50,000 ரூபாய் அளவுக்கு ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தில் 206AB மற்றும் 206CCA என்ற புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரிப்பிடித்தம் செய்யப்பட்டிருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால் அவர்கள் அடிப்படை வருமான வரியில் இருந்து கூடுதலாக 5 விழுக்காடு அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.
எல்.டி.சி சலுகை
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டத்தில் (LTC cash voucher scheme) மத்திய அரசு புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளாமலே, அரசு ஊழியர்கள் வரிச் சலுகை பெற முடியும். எல்.டி.சி சலுகை என்பது நான்கு ஆண்டுகளைக் கொண்ட கால வரம்பாகும். அதாவது, இந்த நான்கு ஆண்டுக்குள் இரண்டு முறை ஒருவர் சுற்றுலா பயணம் செல்வதன்மூலம் அவர் பெற்ற விடுமுறை பயணத் தொகையைச் செலவிட்டு, அதற்கான பயண ஆதாரத்தைக் கொடுத்தால் இந்த தொகைக்கு வரி பிடிப்பது தவிர்க்கப்படும். ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 10 நாள் சம்பளம் எல்.டி.சி ஆக தரப்படும். இந்தப் பணத்தைக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயணம் மேற்கொண்டு அதற்கான பயணச் செலவு ஆதாரத்தைக் கொடுத்தால், அந்தத் தொகைக்கு வரி பிடிக்க மாட்டார்கள். புதிய முறையில் பயணம் மேற்கொள்ளமால் எல்.டி.சி பெறுபவர்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
Also read... வங்கிகள் நாளை செயல்படாது - ஏப்ரல் மாதத்தில் இனி வர உள்ள வங்கி விடுமுறை நாட்கள்!
மூத்த குடிமக்கள் வரிச்சலுகை
வருமானவரி உட்ச வரம்பில் மாற்றம் செய்யாத மத்திய அரசு, 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருவாய்க்கு விதிக்கப்படும் வரிக்கு மட்டும் சலுகை அறிவித்துள்ளது. அதன்படி, 75 வயது அல்லது அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்கள், பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தேவையில்லை. மற்ற ஏதேனும் ஒரு வகையில் வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கு இது பொருந்தாது.
ஐ.டி.ஆர் செலுத்துவதில் மாற்றம்
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது சம்பள வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது மூலதன ஆதாயங்கள், டிவிடெண்ட் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும். இதனை வருமான வரி செலுத்துவோர், கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.