கொரானா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் திருமண கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகத்துடன் நடைபெறவுள்ளன. இந்த வகையில் ரூ. 5 லட்சம் கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி போன்றவற்றை தவிர்த்து மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் திருவிழாவைப் போன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏப்ரல் 3வது வாரத்தில் இருந்து ஜூலை முதல் வாரம் வரையில் அதிக எண்ணிக்கையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிறப்பாக நடத்த தேவையான பொருட்கள், சேவைகளை பெறுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் செலவு செய்யவுள்ளனர். அந்த வகையில் சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு இந்த துறையில் வர்த்தகம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
நாடு முழுவதும் இந்த காலகட்டத்தில் 40 லட்சம் திருமணங்கள் வரை நடைபெறக்கூடும் என்றும், டெல்லியில் மட்டும் சுமார் 3 லட்சம் திருமணங்கள் நடைபெறலாம் என்றும் வர்த்தக சங்கத்தினர் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் முன்பைப் போல வர்த்தகம், போக்குவரத்து, சரக்குகளை இடம் மாற்றுதல் போன்ற பணிகள் இயல்பு நிலையை அடைந்துள்ளன.
இதையும் படிங்க - ஹோண்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்.... அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிப்பு!
அடுத்து வரும் 43 நாட்களில் சராசரியாக 5 லட்சம் திருமணங்கள் தலா ரூ. 2 லட்சம் செலவிலும், 10 லட்சம் திருமணங்கள் தலா ரூ. 5 லட்சம் செலவிலும், இன்னொரு 10 லட்சம் திருமணங்கள் தலா ரூ. 10 லட்சம் செலவிலும் நடத்தப்படலாம். இதேபோன்று 50 ஆயிரம் திருமணங்கள் ரூ. 50 லட்சம் செலவிலும், இன்னொரு 50 ஆயிரம் திருமணங்கள் தலா ரூ. 1 கோடி செலவிலும் நடத்தப்படலாம் என்று வர்த்தக அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்தியாவை பொருத்தவரை திருமண செலவுகளில் 20 சதவீதம் மணமகன் தரப்பில் இருந்தும் 80 சதவீதம் மணமகள் தரப்பில் இருந்தும் செலவு செய்யப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அதிப்படியான செலவுகள் திருமணம் நடைபெறும் இடம், திருமணம் தொடர்பான சர்வீஸ்கள், வீட்டை புதுப்பித்து பெயின்ட் அடித்தல், நகைகள் ஆகியவற்றுக்கு ஆகின்றன.மிதமான செலவுகள் உடைகள், பத்திரிகைகள், இனிப்பு, பழங்கள், போக்குவரத்திற்கு ஆகுவதாக துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.