முகப்பு /செய்தி /வணிகம் / மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கா? இதை கொஞ்சம் படிங்க!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கா? இதை கொஞ்சம் படிங்க!

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பங்கு மதிப்புகள் இதுவரையிலும் 10 சதவீத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன.

நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு (Share Market)செய்பவர் என்றால், அண்மைக்காலமாக அங்கு ஸ்திரத்தன்மை இல்லை என்பதை கவனித்திருக்கக் கூடும். பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு, முதலீடுகளை திரும்பப் பெறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உக்ரைன் - ரஷியா இடையேயான போர் போன்ற பல காரணங்களால் பங்குச்சந்தைகள் நிலையாக இல்லாமல் சரிவை சந்தித்து வருகின்றன.

மியூச்சுவல் பண்ட் (Mutual Fund) முதலீட்டாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பங்கு மதிப்புகள் இதுவரையிலும் 10 சதவீத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன. குறுகிய காலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும், பங்குச் சந்தை என்றாலே ஏற்ற, இறக்கங்களுக்கு அடையாளமாக திகழும் கரடி மற்றும் காளைகளின் குறியீடுகளை கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க.. சோப்பு முதல் ஷாம்பூ வரை தொடர்ந்து உயரும் பொருட்களின் விலை.. என்ன காரணம்?

நிலையற்றத்தன்மையை புரிந்து கொள்ளுங்கள் :

பங்குச் சந்தைகள் என்பது நிலையற்ற தன்மை மீது நிறுவப்பட்டதாகும். சில சமயம் இதன் சரிவுகள் மிதமானதாக இருக்கும், சில சமயம் மிக அதிகமாக இருக்கும். எனினும், சுமார் 2 முதல் 5 சதவீத அளவுக்கான சரிவு என்பது இயல்பானது. அதை மீட்டெடுத்துக் கொள்ளலாம். ஆனால், 10 சதவீத அளவுக்கு சரிவு என்பது கொஞ்சம் சிக்கலுக்கு உரிய விஷயம் தான்.

கடந்த 2009ஆம் ஆண்டில் லே மேன் சகோதரர்களின் வீழ்ச்சி, 2017-18ல் காணப்பட்ட ஏற்ற, இறக்கங்கள், அண்மையில் கொரோனா பெருந்தொற்று கால முடக்கம் என பல சரிவுகளை கண்ட வரலாறு பங்குச் சந்தைகளுக்கு உண்டு. இருப்பினும், பீதி அடையாமல், சவால் எடுத்து முதலீடு செய்தவர்கள் செல்வ செழிப்பு உடையவர்களாக மாறினர்.

இதையும் படிங்க.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி! உணர்த்தும் அபாயம் என்ன?

பங்குகளில் முதலீடு செய்வதா, வேண்டாமா?

பங்குச் சந்தைகள் என்பது சவால்கள் நிறைந்த சொத்து வகை என்றாலும் கூட, நீண்ட கால அடிப்படையில் இது நல்ல பலனைத் தரக் கூடியதாகும். உதாரணத்திற்கு பங்குகளில் நீங்கள் செய்துள்ள முதலீட்டை குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தொடவே கூடாது. எனினும், உங்கள் வயதின் அடிப்படையில் நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஓய்வுபெற வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது.

பணம் தேவையில்லை என்றால் திரும்பப் பெற வேண்டாம்

நிதி சார்ந்த உங்கள் இலக்குகள் நிறைவேறி விட்டன அல்லது உங்களுக்கு பணம் தேவை என்றால் மட்டுமே நீங்கள் பணத்தை திரும்ப எடுப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை ஆகும். சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்ற ஒற்றை காரணத்திற்காக பணத்தை திரும்ப எடுக்கக் கூடாது.

கூடுதல் முதலீடு செய்யலாம்

ஏற்கனவே உள்ள முதலீடுகளுடன், கூடுதல் முதலீடுகளை இணைக்க தற்போதைய சந்தை நிலவரம் நல்ல வாய்ப்புகளை தரக் கூடியதாக அமையும். உங்களிடம் மிகையாக பண இருப்பு இருந்தால், இப்போதே கூடுதலாக முதலீடு செய்து கொள்ளலாம்.

பெரிய தொகைக்கு முதலீடு செய்யக் கூடாது

இப்போது முதலீடு செய்ய சரியான தருணம் என்றாலும், மிகப் பெரும் தொகைக்கு அல்லது மாபெரும் அளவுக்கு முதலீடு செய்யக் கூடாது. ஒற்றை இடத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, சின்ன, சின்னதாக பிரித்து பல பங்குகளில் முதலீடு செய்யவும்.

நிலையற்ற தன்மையை பயன்படுத்திக் கொள்ளவும்

நிலையற்ற தன்மை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். லாபம் என்பது ஒரே சீரான நிலை கொண்ட சந்தையில் இருந்து கிடைத்து விடாது. எங்கும், எப்போதும் ஏற்ற, இறக்கம் இருக்கும். உங்களுக்கான வளத்தை பெருக்கிக் கொள்ள இந்த சூழலை சமயோஜிதமாக பயன்படுத்திக் கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Money, MUTUAL FUNDS, Savings