பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசின் 53.29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கவும், பங்குகளை வாங்கும் நிறுவனத்துக்கே நிறுவனத்தின் நிர்வாக உரிமையை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோல, இந்திய கப்பல் கழகம், இந்திய கன்டெய்னர் கழகம், டெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம், வடகிழக்கு மின்சக்தி கழகம் ஆகியவற்றின் பங்குகளுடன், அதன் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
குறிப்பிட்ட சில பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குத்தொகையை 51 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க இசைவு தெரிவிக்கப்பட்டது. எனினும், நிர்வாக கட்டுப்பாடு மத்திய அரசிடமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்துவரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் உணவுத் துறை அமைச்சகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெங்காயத்தை தனியார் இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டது.
அலைவரிசைக்கான கட்டணத்தை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க முடிவுசெய்யப்பட்டது. இதன்படி, 2020-21, 2021-22-ம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய 42 ஆயிரம் கோடி ரூபாயை தாமதமாக செலுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் பயனடையும்.
தொழில்துறை நல்லுறவுக்கான விதிகள் மசோதாவை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் சட்டவிரோதமாக உள்ள ஆயிரத்து 731 குடியிருப்புகளை அங்கீகரிக்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இசைவு தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், 40 லட்சம் பேர் பலன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.