பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் முக்கியமான வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் முக்கியமான வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

மத்திய பட்ஜெட் 2021

மத்திய பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் முக்கியமான வார்த்தைகளின் அர்த்தங்கள் தெரியவில்லையா.அப்போ இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க..

  • Share this:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று நமக்கு தெரியாது அல்லது தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு சில வார்த்தைகளின் அர்த்தங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

யூனியன் பட்ஜெட் :

இந்தியா என்பது பல ஒன்றியங்களின் கூட்டாட்சி முறையில் நடைபெறும் அரசு ஆகும். இதனால், அனைத்து ஒன்றிய அரசுகளுக்கும் ஏற்ப தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் யூனியன் பட்ஜெட்  என்று அழைக்கப்படுகிறது. யூனியன் பட்ஜெட் மூலம் நாட்டின் வருவாய் மற்றும் செலவுகள் மதிப்பிடுகிறது. பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் துறைகளுக்கு தேவையான தொகையை தீர்மானித்து பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படுகிறது.

வருடாந்திர நிதிநிலை:

வருடாந்திர நிதிநிலை அறிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். இது முந்தைய நிதி ஆண்டுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்வரும் நிதியாண்டிற்கான செலவினங்கள் மற்றும் மதிப்புகளை சுட்டிக்காட்டுகிறது. அரசியலமைப்பின் 112 வது பிரிவின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அரசாங்கம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை முன்வைக்க வேண்டும்.

பட்ஜெட் மதிப்பீடு :

ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகளுக்கான அரசு செய்யும் செலவுகளின் மதிப்பீடு இதில் அடங்கும். வரி வசூல் மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாயும், மதிப்பிடப்பட்ட நிதி பற்றாக்குறை மற்றும் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றை கணக்கிடுவது பட்ஜெட் மதிப்பீடு ஆகும்.

செஸ் வரி :

தனி நபரின் வருமானத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவது வரியாகும். அந்த வரி தொகையின் மீது குறிப்பிட்ட சதவீதத்தில் விதிக்கப்படுவதே 'செஸ்' வரி. அதாவது 'செஸ்' என்பதை மேல் வரி அல்லது கூடுதல் வரி என்று புரிந்து கொள்ளலாம்.

நேர்முக வரி:

ஒவ்வொரு குடிமகனும் தான் பெறும் வருமானத்திற்கான நேர்முக வரியை கண்டிப்பாக செலுத்த வேண்டும். ஆட்சி, நிர்வாகம் செய்வதற்காக குடிமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியாகும். அவை, வீட்டு வரி, சொத்து வரி, வருமான வரியாகும். குடிமக்கள் வரி செலுத்துவதை வருமானவரித்துறை கண்காணிக்கிறது.

மறைமுக வரி:

நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு, விதிக்கப்படும் வரிகள்தான் இந்த மறைமுக வரிகள். இந்த வகையான வரிகளைச் செலுத்துவதும் மக்கள்தான், ஆனால் நாமே நேரடியாகச் செலுத்துவதில்லை. நம்மிடம் இருந்து வரிகளை வசூலித்து, நமக்குப் பதிலாக வியாபாரிகள் அல்லது சேவை வழங்குபவர்கள் அரசுக்குச் செலுத்துவார்கள்.

முதலீட்டை நீக்குதல் :

 ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மத்திய அரசு விற்பனை செய்வது அல்லது பங்குச் சந்தையில் பட்டியலிடும் செயல்முறையாகும். தனியார்துறை மிகவும் பிரபலமாக இருக்கும் தொழில்களில் இருந்து அரசு முடிவெடுத்து வெளியேறுவதாகும். எடுத்துக்காட்டாக, எல்.ஐ.சியின் குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்து, அதில் தனியார்துறையை அனுமதிப்பது என்பது ஒருவகையான டிஸ்இன்வெஸ்மென்ட் ஆகும். 

கலால் வரி :

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்கள் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி, கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி. தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது, பொருளின் தயாரிப்பாளரால் இது செலுத்தப்படும். இருப்பினும் சுங்க வரிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. சுங்க வரி என்பது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருளை நம் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கட்டுவது.

 நிதி மசோதா:

மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்தபிறகு மக்களவையில் நிதி மசோதா அறிமுகப்படுத்தப்படும். அப்போது, எதிர்கட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி மசோதாவின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவார்கள். அதற்கு மத்திய நிதி அமைச்சர் அல்லது துறைசார்ந்த அமைச்சர் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்வி பதில் அளிப்பார். உரிய விவாதத்துக்கு பின்னர் நிதி மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும்.

நிதி உள்ளடக்கம் :

பலவீனமான பிரிவுகள் மற்றும் குறைந்த வருமானக் குழுக்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மலிவு விலையில் நிதி சேவைகள் வழங்கும் செயல்முறையாகும். மேலும், சரியான நேரத்தில் கடன் வழங்குதல் இதனுள் அடக்கம். இது நாட்டின் வங்கிகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான பண உதவியை வழங்கும் நடைமுறை. உதாரணமாக, ஜன்தன் வங்கி கணக்கு சேவையை கூறலாம்.

நிதி பற்றாக்குறை :

 மொத்த வருவாய் மற்றும் அரசாங்கத்தின் மொத்த செலவினங்களுக்கிடையிலான வேறுபாடு நிதிப் பற்றாக்குறையாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான கடன்களை மதிப்பிடலாம். மொத்த வருவாயை கணக்கிடும்போது, கடன்கள் சேர்க்கப்படுவதில்லை

 நிதி கொள்கை :

 நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வடிவமைப்பதற்கும் செலவு மற்றும் வரி வருவாயை சரியாக திட்டமிட்டும் செயல்முறை. இதன்மூலம் அரசு நிதிப் பற்றாக்குறையை அதிகப்படுத்துகிறதா? அல்லது வருவாய், செலவினங்களுக்கு இடையில் சமநிலையை உருவாக்க முயற்சிக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளலாம். நிதிக்கொள்கை மூலம் பொருளாதாரத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.

வருவாய் பற்றாக்குறை:

 வருவாய் வருமானத்தைவிட, வருவாய் செலவினம் அதிகமாக இருந்தால், அது வருவாய்ப் பற்றாக்குறை எனப்படும். இதை, ஒரு தனிநபரின் நிதித் திட்டமிடலுடன் ஒப்பிட்டால், ஒருவரின் வருமானத்திற்குச் சமமாக அல்லது வருமானத்தைவிடக் கூடுதலாகக் கடன் அட்டை செலவினங்கள் இருக்குமானால், அது எவ்வளவு அபாயகரமானதோ, அதுபோலத்தான் ஒரு நாட்டிற்கும் வருவாய்ப் பற்றாக்குறை என்பது அபாயகரமானதாகும்.

அடிப்படை பற்றாக்குறை :

வருவாய் பற்றாக்குறையைவிட ஆபத்தானது அடிப்படைப் பற்றாக்குறை . அடிப்படைப் பற்றாக்குறை என்பது வருவாய் செலவினத்தில் வட்டிச் செலவைக் கழித்ததுபோக மீதமுள்ள வருவாய். செலவுகளைவிட வருவாய் வருமானம் குறைவாக இருப்பதாகும்.

ஜி.எஸ்.டி:

வாட், மத்திய விற்பனைவரி, கலால் வரி, சேவை வரி, செஸ்கள் என்று பலப் பெயர்களில் வசூலிக்கப்பட்டு வந்த வரிகளுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி. பொருட்களுக்கு ஏற்ப பல்வேறு விகிதங்களில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு பொருளுக்கு நாடு முழுவதும் ஒரே வரி வசூலிக்கப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published: