வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மக்களின் தலைவலிகளில் ஒன்று இந்த மினிமம் பேலன்ஸ் தான். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வகையான கணக்கிற்கும் குறைந்தது இவ்வளவு ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. அதற்கு கீழ் இருந்தால், இருக்கும் பணத்தில் இருந்தே அபராதத்தை எடுத்து விடுவார்கள்.
அப்படி பணமே இல்லை எனில் அடுத்த முறை பணம் போடும் போது மறக்காமல் அபராதத்தை கழித்து விடுகிறார்கள். அப்படி கழிக்காமல் நமது கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்க ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு தொகையை வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறோம். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
தனியார் மற்றும் பொதுத்துறை என அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தங்களின் வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதாந்திர இருப்பாக (AMB- Account Minimum Balance) பராமரிக்க வேண்டும். நகர்ப்புறம், மெட்ரோ, அரை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து குறைந்தபட்ச இருப்பு தொகை என்பது மாறுபடும். நகரங்களில் அதிகமாகவும் கிராமப்புறங்களில் குறைவாகவும் இருக்கும்.
SBI : 2020ஆம் ஆண்டு முதல், எஸ்பிஐ தனது அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கான Account Minimum Balance தேவையை தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் இருப்பிடத்தைப் பொறுத்து மாதம் சராசரியாக ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். AMB பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 முதல் 15 வரை அபராதம் மற்றும் வரி விகிதங்கள் விதிக்கப்பட்டது.
HDFC: HDFC வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை பொறுத்தவரை நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் இருப்பவர்கள் குறைந்தது 10,000 ரூபாய் மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டும். அரை நகர்ப்புற இடங்களில், அந்த அளவு ரூ 5,000 ஆகவும், கிராமப் புறங்களில் ரூ.2,500 காலாண்டு இருப்பை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
ICICI : கிட்டத்தட்ட HDFC வங்கியை போலவே குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையாக மெட்ரோ அல்லது நகர்ப்புறப் பகுதிகளுக்கு 10,000 ரூபாய், அரை நகர்ப்புற இடங்களுக்கு ரூ. 5,000 ஐ நிர்ணயித்துள்ளது. கிராமப்புற பகுதிகளுக்கு மட்டும் ரூ. 2,000 பராமரிக்க வேண்டும். சராசரி இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறியவர்களுக்கு, வங்கி பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ. 500 அல்லது எது குறைவாக இருக்கிறதோ அதை அபராதமாக வங்கி எடுத்துக்கொள்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி: மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் காலாண்டு நிலுவை தொகையாக ரூ. 20,000 பராமரிக்க வேண்டும். அதேசமயம், அரை நகர்ப்புற, கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச காலாண்டு சராசரி இருப்பு முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 500 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க: வங்கி தொடர்பான புகார்கள் சந்தேகங்கள் இருக்கா.. இந்த நம்பருக்கு போன் செய்யுங்க
கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், மெட்ரோ பகுதியில் சராசரியாக 10,000 ரூபாயும், மெட்ரோ அல்லாத பகுதிகளில் 5,000 ரூபாயும் மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும். இல்லையேல் 6% அபராதம் விதிக்கப்படும்.
இதை பொறுத்து உங்கள் வங்கி இருப்புகளை பராமரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பைசாவும் கஷ்டப்பட்டு உழைத்தது தானே. அதை ஏன் அபராதமாக செலுத்தி வீணாக்கவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Minimum Balance