ஹோம் /நியூஸ் /வணிகம் /

உலகப் பிரச்னையாக உருவெடுத்த வேலை இழப்பு… பதற்றத்தில் பொறியாளர்கள்..

உலகப் பிரச்னையாக உருவெடுத்த வேலை இழப்பு… பதற்றத்தில் பொறியாளர்கள்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவில் அதிக அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நகரங்களில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Interna, Indiaamerica

  தொழில்நுட்ப நிறுவனங்களில் மொத்த வேலை இழப்பு இந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது என்கிற செய்தியோடு, மேலும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவில் இருக்கும் அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது.

  மிக அண்மையில் டுவிட்டர், அமேசான், மெட்டா உள்ளிட்ட உலகப் பெருநிறுவனங்கள் கொத்துக் கொத்தாக தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அப்பாடா முடிந்தது என நிம்மதியடைய முடியவில்லை. இன்னும் ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் முடிவில் இருக்கின்றனவாம். அதனால் பொறியாளர்கள் பயத்தில் இருக்கிறார்கள்.

  தனியார் இணையதளம் ஒன்று நடத்திய ஆய்வின் படி 2022ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 1 லட்சத்து 37 ஆயிரம் பொறியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது தொடரும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பரவலின் போது பொருளாதார ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டதன் எதிரொலி தான் மாஸ் லே ஆஃப் என்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். அதோடு மேலும் சில காரணங்களையும் பட்டியலிடுகிறார்கள் சிலர்.

  கொரோனா ஊரடங்கு காலத்தில் எத்தனையோ தொழில்துறைகள் சறுக்கலை சந்தித்த போதும், சேவை நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரிய அளவில் நட்டத்தையோ சரிவையோ சந்திக்கவில்லை. ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் போதாத காலம் என்கிறார்கள் சிலர்.  மெட்டா, டுவிட்டர், இண்டெல், சேல்ஸ்ஃபோர்ஸ், நெட்பிளிக்ஸ், சிஸ்கோ, ஹெச்பி மற்றும் அமேசான் உள்ளிட்ட உலகப் பெரு நிறுவனங்களின் அமெரிக்க நாட்டு கிளைகளில் இருந்து இந்த ஆண்டு மட்டும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது உலகம் முழுவதும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இதையும் படிங்க: பாத்திரம் கழுவ சொன்னதால் ஆத்திரம்.. வேலையை உதறிய மெக்டோனால்டு ஊழியர்

  இதே போல் இந்திய தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களும் மாஸ் லேஆஃப் செய்திருக்கிறது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் மற்றும் விப்ரோ நிறுவனங்களிலும் ஆட் குறைப்பு நடைபெற்றிருக்கிறது. ஆட்குறைப்போடு சேர்த்து மற்ற ஊழியர்களுக்கு சம்பள குறைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் இந்தியா முழுவதும் சிறிய ரக ஸ்டார்ட அப் நிறுவனங்களிலும் கூட ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  இந்த நிறுவனங்களில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக கல்வி தொடர்பான தொழில்நுட்ப நிறுவனங்களான பைஜூஸ், உனாக்டமி, வொயிட் ஹேட் மற்றம் வேதாந்தா நிறுவனங்களில் இருந்து மட்டும்  5ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதே போல், மீஷோ, ஓலா, கார்ஸ்24, எம்ஃபைன், பைட்டான்ஸ், ஸ்விக்கி, மேக்மைட்ரிப், பைசா பஜார், லெண்டடிங் கார்ட், ஜொமேட்டோ பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடைபெற்றுள்ளது.

  layoffs.fyi இணையதளத்தின் தரவுகளின் படி இந்தியாவில் அதிக அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நகரங்களில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதே போல் குர்கான், மும்பை மற்றும் டில்லி நகரங்களிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதிச்சுமையை காரணம் காட்டி இதே போன்ற ஆட்குறைப்பு செய்ய பல்வேறு நிறுவனங்களும் முடிவில் இருப்பதாக வரும் செய்திகளால் தொழில்நுட்ப பணியாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

  செய்தியாளர்: ரொசாரியோ ராய்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Employment, IT Industry