இந்தியாவில் இப்போது எங்கு திரும்பினாலும் ரெய்டு மயமாக உள்ளது. மேற்குவங்கத்தில் கல்வித்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த ஜூலை மாத இறுதியில் அமைச்சருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் அமலாக்கத்துறையினர், அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவரும், முன்னாள் உதவியாளருமான அர்பிதா முகர்ஜி என்பவரது வீட்டில் 20 கோடி ரூபாய் மற்றும் 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது கடந்த இரண்டு நாட்களாக தமிழ் பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரபல பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஏராளமான பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி எங்கு பார்த்தாலும் ரெய்டு நடந்து வருவது தொடர்பாக சாமானியர்கள் மனதில் எழும் கேள்வி ஒன்றே, வருமானத்துறைக்கு அஞ்சாமல் எவ்வளவு பணம் மற்றும் நகைகளை வீடுகளில் வைத்திருக்கலாம் என்பது தான். அதற்கான விரிவாக விளக்கத்தை நாங்கள் உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
தனிநபர் வைத்திருக்கக்கூடிய பணத்தின் அனுமதிக்கப்பட்ட வரம்பு என்ன?
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்றால், தனிநபர் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம். ஒருவேளை வருமானத்துறையினர் சோதனைக்கு வந்தால், அவர்களிடம் சமர்ப்பிக்க சரியான ஆவணங்களையும், விசாரணைக்கு தெளிவான விளக்கத்தையும் தர தயாராக இருக்க வேண்டும்.
Also Read : ஐடி தாக்கல் முதல் கேஸ் விலை வரை - இந்த மாதம் அமலுக்கு வந்த 5 புதிய விதிகள்.!
உதாரணத்திற்கு, ரெய்டின் போது உங்கள் வீட்டில் ஒரு கோடி ரூபாய் ரொக்கமாக சிக்கினால், அந்த பணம் எப்படி வந்தது, எந்த முறையில் சம்பாதித்தது போன்றதற்கான கணக்கு மற்றும் ஆவணங்களை முறையாக காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பணத்திற்கான வருமான ஆதாரத்தைக் காட்டத் தவறினால், 137% வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வீட்டில் வைத்திருக்ககூடிய தங்கத்தின் அனுமதிக்கப்பட்ட வரம்பு எவ்வளவு?
வருமான வரித்துறை, ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் என அனைவரும் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி, திருமணமான பெண்கள் அரை கிலோ வரையிலான தங்க நகைகளை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். அதே சமயம் திருமணமாகாத பெண்கள் 250 கிராமும், ஆண்கள் 100 கிராமும் தங்கத்தை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிகப்பட்ட வரம்பானது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை வருமான வரித்துறை அனுமதித்த வரம்புக்கு மேல் வீட்டில் தங்கம் அல்லது தங்க நகைகள் இருந்தால் அவை வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம்.
மேலும், குடும்ப பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு அதிக அளவில் உள்ள தங்கத்தை பறிமுதல் செய்யாமல் விட்டுவிடுவது மதிப்பீடு செய்யும் அதிகாரியின் விருப்பத்திற்கு உட்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே லாக்கரில் நகையை சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது. இதனை வருமான வரித்துறையினர் தவறாக புரிந்து கொண்டு பறிமுதல் செய்யலாம் என்பதால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுடைய வரம்புக்குட்பட்ட நகைகளை தனியாக அவர்களது பெயர்களைக் கொண்ட லாக்கர்களில் சேமிப்பது குழப்பத்தை தவிர்க்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.