₹ 7387 கோடி மதிப்புடைய ‘கியா’ மோட்டார்ஸ் ஆலை தமிழகத்திற்கு இடம்மாறுகிறதா?

KIA Motors |

₹ 7387 கோடி மதிப்புடைய ‘கியா’ மோட்டார்ஸ் ஆலை தமிழகத்திற்கு இடம்மாறுகிறதா?
KIA Motors |
  • News18
  • Last Updated: February 6, 2020, 11:19 AM IST
  • Share this:
ஆந்திராவில் அமைக்கப்பட்டுவரும் 1.1 பில்லியன் டாலர் மதிப்புடைய ’கியா’ மோட்டார்ஸ் நிறுவனம், அங்கிருந்து தமிழகத்திற்கு தனது ஆலையை மாற்ற இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற தென்கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திராவில் தனது தொழிற்சாலையை அமைக்க அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. மூன்று ஆண்டுகளாக கட்டுமானப்பணி நடந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் இந்த ஆலையில் வாகன உற்பத்தி தொடங்கியது.

சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் சுமார் 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். உலகின் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த ஆலை, ஆந்திராவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் பல சிக்கல்களை சந்தித்தது.


ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசத்திடம் இருந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்துள்ள பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகிறார். அத்துடன் அந்த அரசு எடுத்துள்ள பல முடிவுகளும் தற்போது மாற்றப்படுகிறது.

கியா மோட்டார்ஸ் ஆலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 12000 வேலை வாய்ப்புக்களை இந்த தொழிற்சாலை உருவாக்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆந்திர மாநில அரசு, அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 75% பணியை மாநிலத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால் பல பணிகளுக்குத் தேவையான ஊழியர்களை நியமிக்க கடினமாக உள்ளதாக நிறுவன தரப்பு தெரிவித்தது. மேலும், முந்தைய அரசுடன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சாரம் கட்டணம், வரிகள், நில கட்டணங்கள் ஆகியவற்றில் சலுகைகளுக்கான ஒப்பந்தம் இட்டிருந்தது. ஆனால் தற்போதைய அரசு இதுபோல பல வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தங்களை மாற்றி அமைத்து வருகிறது.இந்த காரணங்களால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை ஆந்திராவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்துக்கு மாற்ற உத்தேசித்துள்ளதாகவும் இது குறித்த சாத்தியங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கியா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்குத் தேவையான உதிரிப்பாகங்களை தமிழகம் அளித்து வருவதால், தனது தொழிற்சாலையைத் தமிழகத்துக்கு இடம் பெயர கியா ஆர்வம் காட்டுவதாக ராய்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ராய்டர்ஸ் செய்திக்கு கியா மோட்டார்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆந்திர அரசும் இந்த செய்தியை மறுத்துள்ளது.
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்