இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் பணவியல் கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) இன்று அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை இதன் மூலம் ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா பேரிடருக்கு பின்னர் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்திலேயே தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் இது எதிரொலித்தது. இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 4% என்ற முந்தைய நிலையே தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% ஆக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாணயக் கொள்கைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக மாற்றாமல் இருக்க நாணயக் கொள்கைக் குழு (எம்.பி.சி) ஒருமனதாக வாக்களித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் ரெப்போ விகிதம் 115 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் வரவிருக்கும் நிதியாண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 2020 இந்தியாவின் திறன் மற்றும் சகிப்புத்தன்மை சோதிக்கும் ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு ஒரு புதிய பொருளாதார சகாப்தத்திற்கு களம் அமைக்கும், மேலும் எதிர்காலத்தில் இருந்து பொருளாதாரம் மேல்நோக்கி நகரும்.
கொரோனாவால் ஏற்பட்ட சரிவை வரும் ஆண்டில் சரிசெய்வோம் என்பதை தரவுகளின் அடிப்படையில் உறுதியாக நம்புகிறோம் என சக்தி காந்த தாஸ் உறுதிபட தெரிவித்தார்.
நடப்பு காலாண்டில் சில்லறை பணவீக்க விகிதம் 5.2 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மேலும் 4.3 சதவீதமாகவும் குறையும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மார்ச் இறுதிக்குள் பணவீக்க இலக்கை மத்திய அரசு மதிப்பாய்வு செய்யும் எனவும் ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.