EXCLUSIVE தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மீண்டும் குறைத்தது மத்திய அரசு

EXCLUSIVE தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மீண்டும் குறைத்தது மத்திய அரசு
  • News18 Tamil
  • Last Updated: September 15, 2019, 7:29 PM IST
  • Share this:
தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யும் மண்ணெண்ணெய் அளவை, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு 19வது முறையாக குறைத்துள்ளது.

தமிழகத்தில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கும், ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருப்போருக்கும், ரேஷன் கடைகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் 51,80,711 குடும்பங்களும், 78,92,535 குடும்ப அட்டைதாரர்கள் ஒரு சிலிண்டரும் வைத்துள்ளனர்.

இதில், மாநகராட்சி மற்றும் மாவட்ட தலைநகரங்களில் வசிப்பவர்களுக்கு மாதந்தோறும் 10 லிட்டரும், நகராட்சியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 6 லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. பேரூராட்சிகளில் வசிப்பவர்களுக்கு 5 லிட்டரும், ஊராட்சிகளில் வசிப்போருக்கு 3 லிட்டர் மண்ணெண்ணெயும் விநியோகிக்கப்படுகிறது.


இவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதற்காக, மத்திய அரசு குறிப்பிட்ட கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்யை ஒதுக்கீடு செய்கிறது. ஒரு கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் என்பது, ஆயிரம் லிட்டர் ஆகும். இதை கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக குறைத்துவருகிறது.

2011ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து மாதந்தோறும் 52,806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை வழங்கி வந்த மத்திய அரசு, 2013ஆம் ஆண்டில் மாதந்தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அளவை 29,060 கிலோ லிட்டராக குறைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதினாலும், அதை கண்டுகொள்ளாத மத்திய அரசு, 2018ஆம் ஆண்டில் மாதந்தோறும் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மேலும் குறைத்து, 23,035 லிட்டர் மட்டுமே வழங்கியது.

2020ஆம் ஆண்டு முதல் மண்ணெண்ணெய் மானியத்தை முற்றிலும் ரத்து செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதத்தில் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மேலும் குறைத்து, மாதத்திற்கு 15,588 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கியது.அதன்பிறகு ஏப்ரலில் இருந்து மாதத்திற்கு 16,148 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை கண்டுகொள்ளாத மத்திய அரசு, ஜூலை மாதத்தில் இருந்து மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை 10,764 கிலோ லிட்டராக குறைத்து, தற்போது வரை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதற்காக, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வந்தது. போலி ரேஷன் கார்டுகள் களையெடுப்பு, ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு ஆகிய நடவடிக்கைகளால், பெருமளவு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்கு போதிய அளவு மண்ணெண்ணெய் வழங்க மாதந்தோறும், 23,035 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், அதை நிராகரித்துள்ள மத்திய அரசு, 2011ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 19 முறை தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் முற்றிலும் இல்லாதவர்களுக்கு மட்டுமே , மண்ணெண்ணெய் வழங்கவும் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது..



Watch Also:

First published: September 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்