John McAfee: ஜான் மெக்காஃபி மரணம்... டெக் உலகினர் அதிர்ச்சி - பின்னணி என்ன?

ஜான் மெக்காஃபி

சைபர் செக்யூரிட்டியில் உலகின் முன்னோடியான ஜான் மெக்காஃபி, 1987 ஆம் ஆண்டு மெக்காஃபி கார்ப் என்ற கம்பெனியை கலிஃபோர்னியாவில் உள்ள சான்டா கிளாராவில் தொடங்கினார்.

  • Share this:
கணிணிகளுக்கான முதல் ஆன்டிவைரஸை உருவாக்கிய ஜான் மெக்காஃபி ஸ்பெய்னில் தற்கொலை செய்துள்ளார்.

முதன் முதலாக கணிணிகளுக்கான ஆன்டிவைரஸை உருவாக்கிய ஜான் மெக்காஃபி, சைபர்செக்யூரிட்டி துறையின் உலகின் முன்னோடிகளுள் ஒருவர். திறமையும், புத்திசாலித்தனமும் நிறைந்த அவர், தன் வாழ்நாள் முழுவதும் சர்ச்சைகளுடன் மட்டுமே வாழ்ந்துள்ளார். அமெரிக்காவில் வசித்து வந்த ஜான் மெக்காஃபி, வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வருமான வரி செலுத்தாத அவர் மீது அமெரிக்க வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தது. கவுத்தமாலாவில் சில காலம் தஞ்சமடைந்திருந்த அவர், பின்னர் ஸ்பெயினில் பாய்மரப் படகு ஒன்றில் வசித்து வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரின் இருப்பிடத்தை அறிந்த அதிகாரிகள் கைது செய்து பார்சிலோனா சிறையில் அடைத்தனர். அமெரிக்கா அரசும் அவரை நாடு கடத்துவதற்கான வழக்கை ஸ்பெயினில் நடத்தி வந்தது. அமெரிக்காவுக்கு செல்ல விரும்பாத ஜான் மெக்காஃபி, தன்னை நாடு கடத்துவதற்கு அனுமதிக்க வேண்டாம் என கடந்த விசாரணையின்போது நீதிபதியிடம் வேண்டுகோள் விடுந்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கை நிராகரித்த ஸ்பெயின் நீதிமன்றம், நாடு கடத்துவதற்கான அனுமதியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரின் இறப்பை ஸ்பெயின் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

ஜான் மெக்காஃபி யார்?

சைபர் செக்யூரிட்டியில் உலகின் முன்னோடியான ஜான் மெக்காஃபி, 1987 ஆம் ஆண்டு மெக்காஃபி கார்ப் என்ற கம்பெனியை கலிஃபோர்னியாவில் உள்ள சான்டா கிளாராவில் தொடங்கினார். கணிணிகளுக்கான இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆன்டிவைரஸை உருவாக்கிய அவரது நிறுவனம், உலகளவில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தது. டெக் உலகில் அவரது கம்பெனியே கோலோச்சியது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களாக இருந்த 100 கம்பெனிகளில் சரிபாதியினர் அவரது ஆன்டிவைரஸைப் பயன்படுத்தினர். நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு மெக்காஃபி கார்ப் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ஜான் மெக்காஃபி விலகினார். மெக்காஃபி கார்ப் போன்ற பெரிய நிறுவனத்தை நிர்வகிக்க தான் விரும்பவில்லை என பின்நாளில் பேட்டி ஒன்றிலும் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு இன்டெல் செக்யூரிட்டி கார்ப் நிறுவனம் மெக்காஃபியை முழுவதுமாக வாங்கி, அதனுடைய பிராண்டுகளை மறுவடிவமைப்பு செய்தது. டெக் உலகில் மெக்காஃபியின் பெயர் அழிக்கப்பட்டது குறித்து பிபிசிக்கு பேட்டியளித்த ஜான் மெக்காஃபி, இன்டெல் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். தற்போது ப்ரீயாக இருப்பதாக தெரிவித்த அவர், பூமியில் இருக்கும் மிகமோசமான சாப்ட்வேருடன் இதுநாள் வரை பயணித்ததில் இருத்து விடுதலையாகி இருக்கிறேன் என கூறினார்.

மெக்காஃபி தலைமறைவு

மெக்காஃபியின் சொத்து மதிப்பு 2008 ஆம் ஆண்டு 100 மில்லியனாக இருந்தது. ரியல் எஸ்டேட், பாண்டுகள் உள்ளிட்டவைகளில் தவறாக செய்த முதலீடுகளின் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் வெறும் 4 மில்லியனாக சரிந்தது. அதுவரை சில சர்ச்சைகளில் மட்டுமே சிக்கிய அவர், 2012 ஆண்டு கொலை குற்றச்சாட்டுக்குள்ளானார். பிளோரிடாவைச் சேர்ந்த 52 வயதான ஜார்ஜரி பால் என்பவர் மர்மமான முறையில் கொல்லபட்டார். ஜான் மெக்காஃபியின் அண்டை வீட்டுக்காரராக இருந்த அவரின் இறப்புக்கான சந்தேகம் இவர் மீது விழுந்தது. அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த மெக்காஃபி, கவுத்தமாலாவுக்கு தப்பியோடி அங்கு தஞ்சமடைந்தார்.

பெலிசில் நகரை விட்டு செல்லமாட்டேன் என்ற நிபந்தையுடன் அங்கு வசித்து வந்த மெக்காஃபி, 2012 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் மியாமிக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கவுத்தமாலாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார். பின்னர் அந்நாட்டு அதிபரிடம் மன்னிப்பு கோரியது தனிக்கதை. அதன்பிறகு கொலைக் குற்றச்சாட்டுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என ஃப்ளோரிடா நீதிமன்றம் மெக்காஃபுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே, லிபெர்டேரியன் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த மெக்காஃபிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

Also read... iPhone: செப்டம்பரில் வெளியாகிறதா ஐபோன் 13 சீரிஸ் - விற்பனைக்கு வரும் தேதி குறித்து பரவும் தகவல்!

ஸ்பெய்னில் தஞ்சம்

பின்னர், கிரிப்டோ கரன்சியில் கவனம் செலுத்திய அவர், தன்னுடைய அறிவாற்றலைப் பயன்படுத்தி பல மில்லியன்களை சம்பாதிக்கத் தொடங்கினார். கிரிப்டோகரன்சிகளை தொடர்ந்து புரோமோட் செய்துவந்தார். எம்.ஜி.டி, லக்ஷ்கோர் கிரிப்டோகரன்சி ஆகிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்தினார். இதில் அவருக்கு மில்லியன் கணக்கான ரூபாய் வருவாயாக கொட்டத் தொடங்கியது. கிரிப்டோகரன்சி குறித்து ஒரு போஸ்ட் பதிவு செய்தாலே மில்லியன்களில் பணம் வரும் அளவுக்கு ஜான் மெக்காஃபியின் புகழ் வளரத் தொடங்கியது.

ஆனால், பின்நாட்களில் அவருக்கு அமெரிக்காவில் இருந்து மறைமுகமாக மிரட்டல்கள் வருவதாக குற்றம் சாட்டினார். கிரிப்டோ கரன்சியை ஊக்குவிப்பதை சிலர் விரும்பவில்லை என்றும், டார்க் வோர்ல்டுக்கு பலவந்தமாக தன்னை தள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் ஜான் மெக்காஃபி தெரிவித்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் அவர் மீது வரி ஏய்ப்பு புகார்கள் தீவிரமடையத் தொடங்கியது. 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை முறையாக வரி செலுத்தாத அவரை தலைமறைவு குற்றவாளி என அந்நாடு அறிவித்தது. அவரை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான விசாரணைகளையும் துரிதப்படுத்தியது.

மெக்காஃபி மறைவு

அமெரிக்காவின் தீவிர தேடுதல் வேட்டையில் ஜான் மெக்காஃபி ஸ்பெயினில் பாய்மரப் படகு ஒன்றில் வசித்து வந்தது தெரியவந்தது. அவரின் இருப்பிடத்தை உறுதி செய்த அமெரிக்க அதிகாரிகள், மெக்காஃபியை கைது செயயும் பணியை தொடங்கினர். அதன்படி, ஸ்பெயின் அதிகாரிகள் மெக்காபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்காவும் அவரை நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்கியது. ஸ்பெயின் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு ஆஜரான மெக்காஃபி, தான் அமெரிக்காவுக்கு செல்ல விரும்பவில்லை எனவும், நாடு கடத்துவதற்கான சட்ட நெறிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.

ஆனால், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான ஆணையை பிறப்பித்தது. இதனால், மன முடைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அவருக்கு தற்போது 75 வயதாகிறது. அவருடைய அனுதாபிகள் மெக்காஃபியின் மரணத்தில் சந்தேகமும் தெரிவித்துள்ளனர். மெக்காஃபியின் முடிவு குறித்து லோப் வென்சர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் டஃப் கிளின்டன் பேசும்போது, மேதைகளுக்கும், முட்டாள்தனத்துக்கும் அதிக இடையே தூரமில்லை என்பதை மெக்காஃபியின் முடிவு காட்டுவதாக கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: