ஹோம் /நியூஸ் /வணிகம் /

அலுவலகத்துக்கு வர மறுக்கும் ஐடி ஊழியர்கள்: கடுப்பில் ஐடி நிறுவனங்கள்!

அலுவலகத்துக்கு வர மறுக்கும் ஐடி ஊழியர்கள்: கடுப்பில் ஐடி நிறுவனங்கள்!

வொர்க் ஃப்ரம் ஹோம்

வொர்க் ஃப்ரம் ஹோம்

அலுவலகத்திற்கு வருவது என்பது சவாலானதும் கடினமான விஷயமாகவே இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை பார்க்கும் 88 சதவீத பணியாளர்கள் தற்போது வேலை பார்த்து வரும் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு விட தயாராக இருக்கிறார்கள் என சியல் ஹெச் ஆர் சர்வீசஸ் (CIEL HR Services) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறைக்கு முடிவுகட்டி அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க சொல்வதால் இந்த பிரச்னை எழுந்துள்ளதாக தெரிகிறது.

  கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை அலுவலகத்திற்கு சென்று வேலை பார்ப்பது என்பது மிக வழக்கமான இயல்பான நிகழ்வாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த இரண்டரை வருடங்களாக கொரோனா பாதிப்பினால் வீட்டிற்குள் முடங்கிய பல பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதற்கான வசதிகள் வழங்கப்பட்டு, கடந்த 2 வருடங்களுக்கு மேல் பணியாளர்கள் அனைவரும்  வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர்.

  தற்போது கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை அலுவலகத்தில் வந்து வேலை பார்க்க வற்புறுத்தி வருகின்றன. ஆனால் தங்களது சுதந்திரத்திற்காகவும் குடும்பத்தில் உள்ளருடன் நேரத்தை செலவழிக்க விரும்பும் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கவே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அலுவலகத்திற்கு வர சொல்லி கட்டாயப்படுத்தினால், தங்கள் பார்க்கும் வேலையை விட்டு விடுவதற்கும் தயாராக உள்ளனர் என புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

  இதற்கான கருத்துக்கணிப்பை சியல் ஹெச் ஆர் சர்வீஸ் எனப்படும் பணியாளர் சேவைகளை வழங்கும் நிறுவனம் மேற்கொண்டது. இந்தக் கருத்துக்கணிப்பானது அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் 19 முன்னணி ஐடி நிறுவனங்களை சேர்ந்த 1000 ஆயிரம் பணியாளர்களை உள்ளடக்கி நடத்தப்பட்டது.

  அதில் கிட்டத்தட்ட 88 சதவீத ஐ டி பணியாளர்கள் தற்போது தங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விடுவதற்கு தயாராக இருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. 46 சதவீத பணியாளர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் தாய்மார்களாகவும் அல்லது குழந்தைகளையோ அல்லது பெரியோர்களை பார்த்துக் கொள்ளும் பராமரிப்பாளர்கள் ஆகவும் இருக்கிறார்கள். எனவே வீட்டிலிருந்து வேலை செய்வது அவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சரியான நேரத்தில் ஊதியம் பெற முடிவதோடு குடும்பத்தாரோடும் நேரம் செலவிட முடிவதாக தெரிவித்துள்ளனர்.

  Read More: பண்டிகை காலம்... அதிகரிக்கும் உள்நாட்டு தேவை- ஆய்வு கூறுவது என்ன?

  மேலும் தேவையற்ற செலவுகள் குறைவதாகவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 46 சதவீதம் பேர் கூறுகையில், தற்போது தருவதை விட அதிக சம்பளம் கிடைத்தால் வேறு நிறுவனங்களுக்கு சென்று பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள எட்டு சதவீதம் பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க கட்டாயபடுத்தினால் வேலையை விட்டு நின்றுவிட தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் தங்களுடைய சுதந்திரம், பொழுதுபோக்குகள் ஆகியவை பாதிக்கப்படுவதோடு முதலாளிகளால் தாங்கள் கட்டுப்படுவது போன்ற உணர்வை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

  அதுமட்டுமில்லாமல் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கும் பயணம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் பயண நேரமென்பது தேவையற்றதாக இருப்பதாகவும் அந்த நேரத்தில் தாங்கள் விரும்பும் வேறு ஏதேனும் உபயோகமான வேலையை செய்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். முக்கியமாக அலுவலகத்திற்கு வந்து வேலை பார்த்தால் தங்களுடைய சுதந்திரம் மற்றும் வாழ்க்கை முறை முழுவதுமாக பாதிக்கப்படும் என பணியாளர்கள் எண்ணுவதாக கருத்துக் கணிப்பு நடத்திய சியல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆதித்யா மிஸ்ரா கூறியுள்ளார்.

  மேலும் பணியாளர்களின் “வேலையை விட்டு நின்று விடுவோம்“ என்ற இந்த மிரட்டலானது பெருமளவில் முதலாளிகளையோ அந்த நிறுவனத்தையோ பாதிக்காது. ஏனெனில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் அவர்கள் வேலையை விட்டு நின்றால் அந்த இடத்தை அவர்களை விட குறைந்த ஊதியத்திற்கு நிரப்புவதற்காக பலர் வரிசையில் இருக்கின்றனர். மேலும் உலகமெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையாலும் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது.

  இதைப் பற்றி பேசிய எக்ஸ்பெனோ நிறுவனத்தின் துணை நிறுவனரான அணில் எத்தனூர் கூறுகையில்” சில மாதங்களுக்கு முன்பு வரை வேண்டுமானால் கொரோனாவின் தாக்கத்தினால் பணியாளர்கள் வைத்ததே சட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்போது வேலைவாய்ப்புகள் குறைவாகவும் வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கின்றது. எனவே தற்போதைய சூழ்நிலையில் வேலை வாய்ப்பை வழங்கும் முதலாளிகள் வைத்ததே சட்டமாக இருக்கும். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை முழு நேரமாக அலுவலகத்திலோ அல்லது ஹைபிரிட்(Hybrid) எனப்படும் முறையில் வாரத்தில் சில நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

  இதனால் முழு நேரமாக வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும் என்ற பணியாளர்களின் எண்ணம் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை “அலுவலகத்திற்கு வரச் சொன்னால் வேலையை விட்டு நின்று விடுவேன்” என பயமுறுத்தினால் அது பணியாளர்களுக்கே பாதிப்பாக முடியுமே தவிர முதலாளிகளுக்கு இதனால் எந்த வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  அது மட்டும் இல்லாமல் தற்போதைய சூழலில் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதற்கான வசதிகளை வழங்குவதில் ஐடி நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. ஒருபுறம் ஏற்கனவே இருக்கும் வேலைகள் சரியாக நடக்காமலும், புதியதாக கிடைக்கும் ப்ராஜெக்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. மறுபுறம் பணியாளர்கள் மூன் லைட்டிங் எனப்படும் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் முறையினால் தங்களது நிறுவனத்தின் உற்பத்தித்திறன் குறைவதாகவும் அச்சப்படுகின்றனர். என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

  Read More: இவ்வளவு சலுகைகளா..! - புத்தம் புதிய பாலிசியை சந்தையில் இறக்கிய எல்.ஐ.சி

  எது எப்படியோ பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது பணியாளர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்குமாறு கூறிவிட்டனர். அதில் ஹெச்சிஎல் டெக்(HCL tech) தங்களது பணியாளர்களை வாரத்திற்கு மூன்று முறை மட்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.. Hybrid எனப்படும் இந்த கலாச்சாரம் எவ்வாறு தங்கள் நிறுவனத்திற்கு வேலை செய்கிறது என்பதை இந்த ஆண்டிற்கான இரண்டாம் காலிறுதி முடிவுகளை வைத்து, மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள் என அந்நிறுவனத்தின் முதன்மை மக்கள் அதிகாரி ராமச்சந்திரன் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

  டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஏற்கனவே வாரத்திற்கு மூன்று முறை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஃபோசிஸ் (infosys) நிறுவனம் மட்டும் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதித்துள்ளது. அவர்கள் விரும்பினால் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் அந்நிறுவனத்திற்கு இது லாபகரமானதாக இருப்பதாகவும், இந்த முறையான பணியாளர், முதலாளி என இருவருக்கும் லாபம் உண்டாவதால், தேவையில்லாமல் தங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு கட்டாயப்படுத்தி வர சொல்லவதில் எந்தவித லாபமுமில்லை என தெரிவித்துள்ளது.

  “அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும்” என்பது உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தின் போது பல்வேறு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு குடி பெயர்ந்துள்ளனர். எனவே மீண்டும் அவர்கள் அலுவலகத்திற்கு வருவது என்பது சவாலானதும் கடினமான விஷயமாகவே இருக்கும். அவர்களுக்கான புதிய தங்கும் இடம், புதிய செலவுகள் ஆகியவற்றை மீண்டும் கணக்கிட்டு அனைத்தையும் புதியதாக துவங்க வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

  மேலே கூறியுள்ள படி பல்வேறு நிறுவனங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று முறையாவது அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புவதாகவும், இதுவே பணியாளர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அடெக்கோ இந்தியா (Adecco india) நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் அல்லூரி ரெட்டி கூறியுள்ளார் மேலும் நிர்வாகத்தினரின் நிலையிலிருந்து பார்க்கும் போது, அவர்களின் ரிமோட் ஒர்க்கிங் முறையில் வேலை பார்க்கும் கலாச்சாரம் மெதுவாக கட்டுப்பாட்டை இழந்து வருவதாகவும் சரியான உற்பத்தி திறன் இல்லை என்றும் அச்சப்படுவதாக கூறியுள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: HCL, TCS, Work From Home