Home /News /business /

நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது சிறந்ததா? 

நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது சிறந்ததா? 

ஆண்டுதோறும் அதைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் சரியானதா? அல்லது பல ஆண்டுக்கு கவரேஜ் தரக்கூடிய பாலிசியை எடுப்பதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பாலிசியைப் புதுப்பிக்க வேண்டிய தேவையில்லாமல் இருப்பது நல்லதா?.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ‘ஹெல்த் இன்சூரன்ஸ் எல்லாம் எதுக்கு வீண் செலவு’ என நினைத்தவர்கள் கூட கொரோனா பரவலின் போது ஏற்பட்ட மெடிக்கல் எமர்ஜென்சியைக் கருத்தில் கொண்டு, ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க ஆரம்பித்துள்ளனர். அடிக்கடி புதுப்புது காய்ச்சல்கள் வந்து மருத்துவச் செலவை அதிகரிப்பதால், ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் கவரேஜ் தரக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. அதேசமயத்தில் ஓராண்டுக்கு மட்டும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு, அதனை அடுத்த ஆண்டுக்கு நீட்டித்துக் கொள்ளலாமா? அல்லது பல ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடிய வகையில் நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாமா? என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.

    ஆண்டுதோறும் அதைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் சரியானதா? அல்லது பல ஆண்டுக்கு கவரேஜ் தரக்கூடிய பாலிசியை எடுப்பதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பாலிசியைப் புதுப்பிக்க வேண்டிய தேவையில்லாமல் இருப்பது நல்லதா?. எதில் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்...

    நீண்ட கால பாலிசியின் நன்மைகள்:

    நீண்ட காலத்திற்கு எடுக்கப்படும் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை, பிரீமியங்களில் தள்ளுபடி, ஆண்டுக்கு ஒருமுறை பிரீமியம் கட்டணம் அதிகரிப்பதில் இருந்து பாதுகாப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.

    ஆன்லைன் இன்சூரன்ஸ் விநியோக தளமான RenewBuy இன் இணை நிறுவனர் இந்திரனீல் சாட்டர்ஜி கூறுகையில், "நீண்ட கால திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, பாலிசிதாரர்கள் பிரீமியம் தொகையை முன்கூட்டியே சேமிக்க முடியும். இது வருடாந்திர புதுப்பித்தலில் உள்ள இடையூறுகளை நீக்குகிறது. மேலும் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பாலிசியை ரத்து செய்யவோ அல்லது இடையிலேயே நிறுத்தவோ எளிமையான ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது” என்கிறார்.

    நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளில் இருந்து தொடங்கிறது. இதற்கான பிரீமியத்தை ஒரே தவணையாக செலுத்துவதால், ஆண்டுக்கு ஒருமுறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மேற்கொள்ளும் பிரீமியம் தொகை உயர்வில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

    அதேபோல் நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் 5 முதல் 15 சதவீதம் வரை பணத்தை சேமிக்கும் வாய்ப்பையும் பெற முடியும். குறிப்பாக நீண்ட கால பாலிசிகளை வைத்துள்ளவர்கள், ஆண்டுதோறும் இன்சூரன்ஸை புதுப்பிக்க காத்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இதனால் எந்தவித தடையும் இன்றி அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைகளை பெற முடியும்.

    நீண்ட கால பாலிசியின் தீமைகள்:

    வாடிக்கையாளர்களின் தேவைக்கும், காலத்திற்கும் ஏற்ப இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த பிரீயமிங்களில் குறைந்த கால அளவைக் கொண்ட புதுப்புது பாலிசிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஆனால்,நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஒரு குறிப்பிட்ட இன்சூரன்ஸ் கம்பெனியுடன் பல ஆண்டுகளுக்கு முடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனம் மலிவு விலையில், அதிக கவரேஜ் மற்றும் பலன்களைக் கொண்ட பாலிசிகளை கொண்டு வந்தால் அந்த திட்டத்திற்கு மாற முடியாது. நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகும் காலம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது.

    வரிச்சலுகை:

    நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்காக செலுத்தப்படும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டத்தின் 80D பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், வரி சலுகையைப் பெற ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் விகிதாச்சாரப்படி பிரிக்கப்பட வேண்டும்.

    நீண்ட கால பாலிசி யாருக்கு பயன்படும்?

    ஆண்டுதோறும் பாலிசியை புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ள விரும்பாத நபர்கள் நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி திட்டங்களை வாங்கலாம். இதன் மூலமாக ஆண்டுதோறும் பிரீமியத்தை புதுப்பிக்க ஆகும் கட்டணம், பிரீமியம் தொகையில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை தவிர்க்கலாம். எந்த ஒரு பாலிசிதாரரும் தனது பாலிசி காலாவதி ஆவதையோ, அதனை புதுப்பிப்பதற்காக அதிக அபராதங்களை செலுத்துவதையோ விரும்பமாட்டார்கள் என்பதால் நீண்ட கால பாலிசி திட்டமானது பலருக்கும் பயனுள்ளதாகும்.

    Read more: ஈஸியா கிடைத்தாலும் பர்சனல் லோனுக்கு எங்கு YES/NO சொல்ல வேண்டும் தெரியுமா?

    பொதுவான நன்மைகள்:

    - நீண்ட கால காப்பீடு மூலமாக பிரீமியத்தின் மீது தள்ளுபடி பெற முடியும்.
    - இந்த திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80D பிரிவின் கீழ் வரிச் சலுகை உள்ளது.
    - காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து குறைந்தது 3 ஆண்டுகளுக்கான பலன்களைப் தொடர்ச்சியாக பெற முடியும்.
    - இத்திட்டத்தில் பாலிசியை புதுப்பிக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Health, Insurance

    அடுத்த செய்தி