முகப்பு /செய்தி /வணிகம் / முதலீட்டாளர்களுக்கு 2.6 லட்சம் கோடி இழப்பு;அதீத சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்! காரணம் என்ன?

முதலீட்டாளர்களுக்கு 2.6 லட்சம் கோடி இழப்பு;அதீத சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்! காரணம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்36,563 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 10,798 புள்ளிகளில் நிறைவடைந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உள்நாடு மற்றும் சர்வதேச காரணிகளால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதீத சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. முதலீட்டாளர்களுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரும் பணக்காரர்கள் மீதான கூடுதல் வரி, இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தையில் செய்திருந்த முதலீட்டை திரும்ப பெற தொடங்கினர்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு இந்திய பங்குச்சந்தையை விட்டு வெளியேறியது. இதை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூடுதல் வரியை நீக்குவதாக அறிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் அறிவித்தார். இருப்பினும், இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சமாதானம் ஆனதாக தெரியவில்லை. ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கி, கடந்த 10 நாட்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 5,486 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் திரும்ப பெற்றுள்ளனர்.

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 770 புள்ளிகள் சரிந்து 36,563 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 225 புள்ளிகள் சரிந்து 10,798 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் 2.6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளனர்.

மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்தாலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 5 சதவிதமாக குறைந்திருப்பது, 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1 சதவிதமாக சரிந்துள்ளது போன்றவை, சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சர்வதேச காரணிகளும் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய பங்குச்சந்தைகளின் போக்கு இன்னும் சில நாட்களுக்கு சரிவை நோக்கியே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த சரிவு என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் நிகழ்வு தான் என்றும், இது கண்டிப்பாக சரியாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Also Read : நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, ஒரு கோடி ரூபாய் பறித்த பெண்

First published:

Tags: Nifty, Sensex