சர்வதேச பெண் குழந்தை தினம் இன்று அக்டோபர் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பால் வேறுபாட்டை மாற்றி பெண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைக்கும் இந்த நாளில், நம் வீட்டில் இருக்கும் குட்டி செல்வங்களுக்கு சேமிப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைக்க ஏற்ற சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் (SSY) நன்மைகளைப் பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி என்றால் என்ன?
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது நாட்டில் உள்ள பெண் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டமாகும். பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு செய்ய ஒரு நல்ல வாய்ப்பாகும்.
சுகன்யா சம்ரித்தி கணக்கை (SSA) ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ₹ 250 முதல் ₹ 1.50 லட்சம் வரை வைப்புத் தொகையுடன் தொடங்கலாம். கணக்குத் தொடங்கிய பிறகு அதிகபட்சமாக 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யலாம். வைப்புத்தொகை 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். பெண் குழந்தையின் திருமண தேதிக்கு அப்பால் கணக்கின் செயல்படாது.
SSY மீதான வரிச் சலுகைகள்
இந்தத் திட்டத்தில் இருந்து ஈட்டப்படும் வட்டிக்கு, வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு -10 இன் கீழ் வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், திட்டத்தில் போடும் முதலீடு, வரி சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் விலக்கு பெறத் தகுதி பெறுகிறது.
SSY மீதான வட்டி விகிதங்கள்
அக்டோபர் 1 முதல் பல சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்திய போதிலும், SSY வட்டி விகிதம் மாறாமல் 7.6% ஆக உள்ளது. எனினும் இது குறிப்பிடத்தக்க லாபத்தை தரவல்லது. இந்த கணக்கிற்கு வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டு வட்டியாக சேர்க்கப்படுகிறது. மாதத்தின் ஐந்தாவது நாள் முதல் மாத இறுதி வரை கணக்கில் இருக்கும் இருப்பு தொகை, மாதத்திற்கான வட்டியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும். மேலும் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கிற்கு வட்டி வழங்கப்படும்.
யார் தொடங்கலாம்:
சுகன்யா சம்ரித்தி கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவரது இயற்கை அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் திறக்க முடியும். இருப்பினும், ஒரு நபர் ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். இந்தத் திட்டம் ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகளை மட்டுமே உள்ளடக்கும், எனவே, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ஒரு கணக்கைத் திறக்க முடியும்.
மூன்று குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம்:
தற்போது மூன்று பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால் மூன்றாவது கணக்கைத் திறக்கலாம் என்று அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் பிரசவத்தின்போது இரட்டைப் பெண் குழந்தைகளும், இரண்டாவது பிரசவத்தின்போது மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தால், மூன்றாவது பெண் குழந்தைக்கு சுகன்யா சம்ரித்தி கணக்கு தொடங்கலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.