உலகின் மிகப்பெரிய பாமயில் எண்ணெய் உற்பத்தியாளராக இந்தோனேசியா திகழ்கிறது. உலகின் சுமார் 50 சதவீத பாமாயில் எண்ணெய் தேவையை இந்தோனேசியா பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், உள்நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்து இந்தோனேசியா உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தோனேசியாவில் பாமாயில் விற்பனை விலை உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு அச்சமடைந்துள்ளது. இதன் காரணமாக, பாமாயில், சமையல் எண்ணெய் மற்றும் அதன் மூலப்பொருள் ஏற்றுமதிக்குத் தடைவிதித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜோகோ விட்டோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின் இந்த கொள்கை உரிய முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை தான் நேரடியாக கண்காணிப்பேன் என அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க:
கொரோனாவை ஒழிக்க நூதன ஐடியோ.. ரூ.20 லட்சம் பில் வந்ததுதான் மிச்சம்..
ஏற்கனவே, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் விலைவாசி உயர்வு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருள்களின் விலை உலக அளவில் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பணவீக்க விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்தோனேசியா தடையால் இந்தியாவுக்கு பாதிப்பா?
இந்தோனேசியா நாட்டிலிருந்து இந்தியா அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது. மாதத்திற்கு சுமார் நாற்பது லட்சம் டன் எண்ணெய் இறக்குமதியை இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியா மேற்கொள்கிறது. ஏற்கனவே, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி உக்ரைன் போர் காரணமாக இந்தியாவில் பாதிப்புக்குள்ளான நிலையில் இந்தோனேசியாவின் இந்த முடிவும் இந்தியாவை பாதிக்கும்.
குறிப்பாக, நாட்டில் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், இது நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெகுவாக பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உணவு, காஸ்மெட்டிக்ஸ், பயோ எரிவாயு ஆகியவற்றுக்காக இந்தியா பாமாயிலை பயன்படுத்துகிறது.
இந்த பாமாயில் தடையானது இந்தோனேசியாவில் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவை போலவே சீனாவும் இந்தோனேசியாவில் இருந்து அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. இந்தியா பாமாயில் தேவைக்கு வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்து இல்லாமல், உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இதற்காக கொள்கை வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, நடப்பு நிலவரப்படி இந்தியா சுமார் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பரவில் பாமாயில் உற்பத்தியை மேற்கொண்டுவரும் நிலையில், இதை 2025-26 ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.