உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் மீண்டும் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து தனது சர்வதேச விமான சேவை அட்டவணையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை முழுஅளவில் இந்தியா சமீபத்தில் மீண்டும் துவக்கியது. இதனிடையே அடுத்த மாத இறுதிக்குள் சுமார் 150-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை படிப்படியாக மீண்டும் தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் கூறி இருக்கிறது.
இது தொடர்பான அறிக்கையில் இண்டிகோ நிறுவனம் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான (scheduled international flights) சேவைகளை 150-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், ஏப்ரல் 2022-க்குள் படிப்படியாக மீண்டும் தொடங்க இருப்பதாக கூறி இருக்கிறது. தாய்லாந்தில் உள்ள இடங்களுக்கான திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் ஏற்கனவே மார்ச் 27 முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் IndiGo தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி, அகமதாபாத், மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத், அமிர்தசரஸ், கோழிக்கோடு, கொச்சி, சண்டிகர், திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு போன்ற நகரங்களில் இருந்து நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தம்மம், குவைத், அபுதாபி, ஷார்ஜா, ஜித்தா, ரியாத், தோஹா, பாங்காக், பூகத், சிங்கப்பூர், கொழும்பு, துபாய், காத்மாண்டு, மாலத்தீவு மற்றும் டாக்கா உள்ளிட்ட சர்வதேச இடங்களுக்கும் விமான சேவைகளை துவக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கான விமானங்கள் முன்னர் அந்தந்த நாடுகளுடனான ஏர்-பபிள் ஒப்பந்தங்களின் கீழ் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read : இண்டிகோவின் புதிய ஆஃபர்: ஆப் வழியாக முன்பதிவு செய்தால் ஃப்ரீ மீல் மற்றும் சீட் செலெக்ஷன்!
திட்டமிடப்பட்ட விமானங்கள் மீண்டும் தொடங்குவது, உலகத்துடனான இந்தியாவின் தொடர்பை மேம்படுத்துவதோடு, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை துரிதப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IndiGo-வின் தலைமை வணிக அதிகாரி வில்லியம் போல்டர் கூறுகையில், திட்டமிடப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச பயணத்திற்கான பெரும் தேவையை நாங்கள் காண்கிறோம். ஆசியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுடனான மேம்படுத்தப்பட்ட இணைப்பை பெற உதவும் விமான சேவைகள், பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஊக்கமாக இருக்கும் அதே நேரத்தில் பயண மற்றும் சுற்றுலாத் துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும் என நம்புகிறோம். தொற்றுக்கு பிறகு நாடு மீண்டும் எழுச்சி பெற உதவுவதில் இண்டிகோ தனது பங்கை ஆற்ற உறுதியுடன் உள்ளது. சரியான நேரத்தில் தொந்தரவில்லாத சேவையை மலிவு கட்டணத்தில் வழங்குவோம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.