2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய தினம் வெளியிடப்படும் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2022-23 நிதியாண்டில் ஈடேறிய பொருளாதார விபரங்களை இந்த அறிக்கையில் பட்டியலிடுவர். அதேபோல இந்த நிதியாண்டிற்கும் வரப்போகும் நிதியாண்டிற்குமான திட்டங்களை இந்த அறிக்கை முன்வைக்கும்.
அந்த அறிக்கையில், திட்டங்கள், சலுகைகள், புதிய முன்னெடுப்புகள் என்னென்ன பலன்களை தந்துள்ளது என்று பட்டியலிட்டுள்ளனர். அதேபோல் விவசாயம், சிறுதொழில், பெரு நிறுவனங்கள், மின்சாரம், உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களை குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : பட்ஜெட் 2023: பட்ஜெட்டுக்கு முன் தாயாராவது அல்வா மட்டுமல்ல.. 'பொருளாதார ஆய்வறிக்கை' பற்றி தெரிஞ்சுக்கோங்க!
பருவநிலை மாற்ற சவால்களை மீறி 2021-22ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியில் சாதனை அளவான 315.7 மில்லியன் டன்களை தொட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், 2022-23க்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி , நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 149.9 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2016-17 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளின் சராசரி உணவு தானிய உற்பத்தியை விட அதிகமாகும்.
பருப்பு வகைகளின் உற்பத்தியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 23.8 மில்லியன் டன்களை விட அதிகமாக உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் விவசாயம் சார்ந்த கால்நடைகள், வனம், மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய மற்ற துறைகளும் படிப்படியாக வலுவான வளர்ச்சியை அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்பு துறையானது 2014-15 முதல் 2020-21 வரையிலான காலத்தில் 7.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. இதேபோல், மீன்வளத் துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 2016-17 முதல் சுமார் 7 சதவீதமாக உள்ளது. உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் எட்டாவது இடத்திலும் உள்ளதாக கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.
அதே போல 31 டிசம்பர் 2022 நிலவரப்படி, 1.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் 2.3 லட்சம் வர்த்தகர்கள் e-NAM போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையைப் பெறுவதை உறுதி செய்து அது நன்மையை வழங்கியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பகிரப்பட்ட சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் என்ற அடிப்படையில் பலனைப் பெற ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு (ODOP) அணுகுமுறையை ஏற்படுத்தினார். இதுவரை, 35 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ODOP இன் கீழ் 137 தனிப்பட்ட தயாரிப்புகளுடன் 713 மாவட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 2022 இல் தொடங்கப்பட்ட உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISFPI), உலகளாவிய உணவு சாம்பியனை உருவாக்குவதற்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் வேலையை செவ்வனே செய்து வருவதாக கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Union Budget 2023