அமெரிக்காவின் மத்திய வங்கி 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகள் பெரும் இழப்புடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில் திங்கள் கிழமையும் வர்த்தகம் சரிவுடனே தொடங்கியது.
காலையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிந்து 57,000 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 250 புள்ளிகள் வரை சரிந்து 17,000 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மெட்டல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்து ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. பின்னர் வர்த்தகத்தின் இடையில் சிறிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 950 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தை நிப்ஃடி, 310 புள்ளிகளையும் இழந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மெட்டல், ஆட்டோமொபைல், பொதுத் துறைவங்கிகள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை கண்டன. அதானி துறைமுக பங்குகள் 6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தன. டாடா மோட்டர்ஸ், ஹிண்டல்கோ, மாருதி ஆகிய நிறுவனங்கள் 5 விழுக்காடு இழப்பை சந்தித்தன. இதற்கு மாறாக தகவல் தொழில் நுட்பத் துறையின் பங்குகள் மட்டுமே ஏற்றத்தை கண்டன.
Also Read: 129வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் நிம்மதி!
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி:
இதே போல் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் திங்கள் கிழமையும் வரலாறு காணாத அளவில் சரிவை அடைந்தது கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகிறது. கடந்த மாதம் ரூபாயின் மதிப்பு 80 ரூபாய்க்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை தாண்டியது. இது திங்கள்கிழமை மேலும் வீழ்ச்சி அடைந்து 81.45 என சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் லாபத்தை தரும் என்றாலும், இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு 85 முதல் 90 ரூபாய் வரை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nifty, Sensex, Stock market, Stock market crash