• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இந்திய பங்குச் சந்தைகள் சரிவு : ஒரே நாளில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு

இந்திய பங்குச் சந்தைகள் சரிவு : ஒரே நாளில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு

பங்குச் சந்தை சரிவு

பங்குச் சந்தை சரிவு

சர்வதேச பொருளாதாரத்தில் ரூ.172 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
    15 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதீத சரிவை சந்தித்து வருகின்றன. சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிப்டி இது வரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும், சென்செக்ஸ் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கும், நிப்டி, 13 மாதங்களில் இல்லாத அளவிற்கும் சரிந்துள்ளது.

    இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1942 புள்ளிகள் சரிந்து 35,635 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 538 புள்ளிகள் சரிந்து 10,451 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    ஜனவரி 14-ம் தேதி 41,952 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தற்போது 35,635 புள்ளிகளாக சரிந்துள்ளது. அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, ஜனவரி 14-ம் தேதி 12, 362 புள்ளிகளில் இருந்து தற்போது 10,451 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. கடந்த 40 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் சுமார் 6,317 புள்ளிகளும், நிப்டி, 1,911 புள்ளிகளும் சரிந்துள்ளன.

    இந்திய பங்குச்சந்தைகளின் தொடர் சரிவுக்கு, சர்வதேச அளவில் கரோனாவின் தாக்கமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

    கொரோனா பாதிப்பு காரணமாக, சர்வதேச பொருளாதாரத்தில் சுமார் 172 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து, சவுதி அரேபியா, ரஷ்யா இடையேயான கருத்து வேறுபாட்டால், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    யெஸ் வங்கியின் தற்போதைய நிலை, இந்திய வங்கி துறை மற்றும் நிதித்துறை மீதான சந்தேகத்தை முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளதும், பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    கடந்த 15 வர்த்தக தினங்களில் மட்டும் சர்வதேச முதலீட்டாளர்கள் சுமார் 22,000 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.

    இவை அனைத்தும் கடந்து, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவு இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் 5 விழுக்காட்டிற்கு மேல் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் 7 லட்சம் கோடி ரூபாய் வரை தங்களது முதலீடுகளை இழந்துள்ளனர்.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் பெரும் சரிவு காணப்பட்டது. ரூபாயின் மதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு 74 புள்ளி 15 காசுகளாக குறைந்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: