ஹோம் /நியூஸ் /வணிகம் /

மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்தால் ரூ.1500 கோடி கூடுதல் வருமானம்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்தால் ரூ.1500 கோடி கூடுதல் வருமானம்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Indian Railways | மூத்த குடிமக்களுக்கான சலுகையை பறித்ததன் மூலமாக இந்தியன் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி மூலம் பகீர் உண்மை வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மார்ச் 2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டத்தொடங்கியது. உடனே இந்தியன் ரயில்வே தனது டிக்கெட் சலுகைகளில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது. மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுக்களில் வழங்கப்பட்டு வந்த சலுகையை இந்தியன் ரயில்வே நிறுத்தியது. இதனால் மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதன் மூலம் இந்தியன் ரயில்வேவிற்கு 1500 கோடி ரூபாய் கூடுதலாக லாபம் கிடைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தாக்கல் செய்த கேள்விக்கான பதில் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, மார்ச் 20, 2020 முதல் மார்ச் 31, 2022க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு ரயில்வே சலுகைகளை வழங்கவில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண்களும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண்களும், 8,310 திருநங்கைகளும் பயணித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் பயணிகளின் மொத்த வருவாய் ரூ.3,464 கோடியாகும், இதில் சலுகை நிறுத்தப்பட்டதன் மூலம் கூடுதலாக ரூ.1,500 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்று ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த வருவாயில் பாலினம் வாரியாக பிரித்து பார்க்கும்போது, ​​ஆண் பயணிகளிடமிருந்து ரூ.2,082 கோடியும், பெண் பயணிகளிடமிருந்து ரூ.1,381 கோடியும், திருநங்கைகளிடமிருந்து ரூ.45.58 லட்சமும் கிடைத்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெற பெண் பயணிகளின் வயது குறைந்தது 58 ஆகவும், ஆண் பயணிகளுக்கு 60 வயது ஆகவும் இருக்க வேண்டும். 58 வயதுடைய பெண்களுக்கு 50 சதவீதமும், 60 வயதுடைய ஆண்களுக்கு 40 சதவீதமும் ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

பெண் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகள் அனைத்து வகுப்புகளிலும் 40 சதவீத சலுகையைப் பெறலாம். சலுகையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ஒரு பெண்ணுக்கு 58 ஆகவும், ஆணுக்கு 60 ஆகவும் உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தின் போது ரயில்வே பல சலுகையை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும் கூட மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் அமலாக்கப்படவில்லை.

Also Read : 4 மணி நேரம் தவித்த ரயில் பயணி அபாயச் சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு

RTI அறிக்கையின் படி, 4.41 கோடி மூத்த குடிமக்களில் 7.53 லட்சம் பேர் (1.7 சதவீதம்) 50 சதவீத சலுகையையும், 10.9 லட்சம் பேர் (2.47 சதவீதம்) 100 சதவீத சலுகையையும் விட்டுக் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதன் மூலம் மட்டும் இந்தியன் ரெயில்வேக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமா - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

ஜூலை 2016ம் ஆண்டு முதல் ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதுபோன்ற பல்வேறு அடிப்படைகளில் 53 வகையான சலுகைகள் வழங்கப்படுவதால் நாட்டின் ரயில் போக்குவரத்து துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனைச் சுட்டிக்காட்டி மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்து வந்தனர். இத்திட்டம் கொரோனா காலத்தில் இடைக்கால நிறுத்தமாக அறிவிக்கப்பட்டு, தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Indian Railways, RTI