அமெரிக்க நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் அமேசானுக்கு மாற்றாக, இந்தியாவில், இந்திய அரசாங்கம் புதிய டிஜிட்டல் காமர்ஸ் தளத்தை தொடங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேக் இன் இந்தியாவின் புதிய பரிமாணமாக இந்த டிஜிட்டல் காமர்ஸ் தளம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இணையதளம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஈ-காமர்ஸ் விற்பனையில் எதிரொலித்துள்ளது. ஆனால், இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் பெரிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் எல்லாமே, பன்னாட்டு நிறுவனமாகவும், அமெரிக்க நிறுவனங்களாகவும் உள்ளன. மில்லியன் டாலர் பிசினஸ் என்பதையும் கடந்து அமெரிக்க நிறுவனங்கள் நம் நாட்டில் மிகப்பெரிய சந்தையைப் பிடித்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கவும், கிட்டத்தட்ட முடிவு கட்டவும், இந்திய அரசாங்கம் ஒரு புதிய வெளிப்படையான டிஜிட்டல் காமர்ஸ் தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஓப்பன் நெட்வொர்க் டிஜிட்டல் காமர்ஸ் (Open Network Digital Commerce) என்று கூறபப்டும் இந்த தளம், இந்தியாவின் உள்நாட்டு விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோர் தங்களுக்குள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும். வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ள ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தில் உள்ள உள்நாட்டு செல்லர்கள் மீது திடீரென்று நடத்தப்பட்ட இந்தியாவின் நம்பிக்கையற்ற சோதனை தான் இந்த இயங்குதளம் உருவாக்க காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் சட்டத்தை மீறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. எனவே, ஒரு வெளிப்படையான வாங்கும்-விற்கும் நெட்வொர்க்கை இந்திய அரசாங்கமே ஏற்று நடத்த முடியும் என்பதை ONDC மூலம் செயல்படுத்த உள்ளனர்.
Read More : சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை
சமீபத்தில் வெளியான செய்திகளின் படி, இந்த ONDC முதல் கட்டமாக டெல்லி NCR பகுதி, பெங்களூரு, போபால், ஷில்லாங் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட இருக்கிறதாக கடந்த வாரம் வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. அடுத்த அடுத்த கட்டங்களில், வெவ்வேறு ஊர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ONDC திட்டத்தில் கிட்டத்தட்ட 3 கோடி விற்பனையாளர்களையும், 1 கோடி ஆன்லைன் வணிகர்களையும் இணைக்க இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள், குறைந்தது 100 நகரங்களையாவது இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருவதாக கூறுகிறது.
ரியூட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மோடி அரசும், அவரின் ஆதரவாளர்களும் இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இரண்டுமே, மிகப்பெரிய விற்பனையாளர்களுக்கு மட்டுமே பலன் அளிக்கிறது என்று நீண்ட காலமாக கருதி வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள எந்த வழிமுறைகளையும் மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசாங்கத்தின் புதிய ONDC தளத்தின் இந்த முடிவைக் கேட்டு இதுவரை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இரண்டு தளங்களுமே இது வரை எந்த விதமான பதிலையும் தெரிவிக்கவில்லை.
பல தளங்கள் பன்மொழியில் சேவைகளை வழங்கி வருவது போலவே, அரசாங்கமும் ONDC சேவையை இந்தியாவின் பல மொழிகளில் வழங்க இருப்பதாகக் கூறியுள்ளது. சிறிய வணிகர்கள் மற்றும் கிராமப்புற நுகர்வோர்களை இந்த சேவையில் இணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள் இந்த திட்டத்துக்கு நிதி வழங்கியுள்ளது. இது வரை, ஐஸிஐஸிஐ வங்கி, பரோடா வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகள் முதலீடு செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.