புதிய வேளாண் சட்டங்களினால் வேளாண் வருவாய் அதிகரிக்கும்: IMF தலைமைப் பொருளாதார அதிகாரி கீதா கோபிநாத்

புதிய வேளாண் சட்டங்களினால் வேளாண் வருவாய் அதிகரிக்கும்: IMF தலைமைப் பொருளாதார அதிகாரி கீதா கோபிநாத்

கீதா கோபிநாத் - ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார அதிகாரி

இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் சீர்த்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இதில் உள்கட்டமைப்பு மிக முக்கியமானது என்கிறார் கீதா கோபிநாத்.

 • Share this:
  புதிய வேளாண் சட்டங்களினால் வேளாண் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனால் பலவீனமான குறு விவசாயிகளுக்கான சமூகப் பாதுகாப்பு வலை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இந்திய விவசாயம் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று பன்னாட்டு நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார அதிகாரி கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

  இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் சீர்த்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இதில் உள்கட்டமைப்பு மிக முக்கியமானது என்கிறார் கீதா கோபிநாத்.

  கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களினால் விவசாயிகள் வருவாய் பெருகும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்தாலும் குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்துவதோடு புதிய வேளாண் சட்டங்களையே ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் ஐ.எம்.எஃப். தலைமை பொருளாதார அதிகாரி கீதா கோபிநாத் கூறியதாவது:

  இந்த வேளாண் சட்டங்கள் குறிப்பாக மார்க்கெட்டிங்கைக் குறிப்பதாக உள்ளது, அதாவது வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது, விற்பனை தொடர்பானவையாகவே உள்ளன. மண்டிகள் தவிர வேறு நிலையங்களிலும் வரி கொடுக்காமல் விற்க முடியும் என்ற ஒன்றினால் விவசாயிகள் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமே.

  ஒவ்வொருமுறை சீர்த்திருத்தம் செய்யப்படும் போதும் பரிமாற்ற செலவுகள் இருக்கவே செய்யும். இது குறு, மற்றும் சிறு விவசாயிகள் அல்லது பலவீன விவசாயிகளைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

  அதாவது அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையம் உருவாக்கப்படுவது அவசியம். இப்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன, இதன் பலன் என்னவென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம், என்றார் கீதா கோபிநாத்

  இதுவரை போராடும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் 11 சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளன. இருதரப்பும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வராததால் போராட்டம் நீடித்து வருகிறது, இந்நிலையில் பன்னாட்டு நிதிய தலைமை பொருளாதார அதிகாரி கீதா கோபிநாத் இவ்வாறு கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: