வங்கி பரிவர்த்தனைகள் அனைத்துக்குமே பல்வேறு புதிய விதிமுறைகள் அவ்வபோது அமல்படுத்தப்படும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் முதல், அந்தந்த வங்கிகள் உருவாக்கும் விதிகள் வரை பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, ATM கார்டு பயன்பாடு என்று அனைத்துமே அடங்கும். அதே போல, வருமான வரிச் சட்டத்தின் அடிப்படையிலும் பணம் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு சில விதிகள் உள்ளன. குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் பணம் டெபாசிட் செய்தால், பான் எண்ணை வழங்க வேண்டும். வங்கியில் ரொக்கமாக (cash) டெபாசிட் செய்வதிலும், கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கும் வருமான வரி புதிய விதி, மே 26 முதல் அமலுக்கு வருகிறது.
ஒரு நபர் வங்கிக் கணக்கில் 20 லட்ச ரூபாய்க்கும் மேல் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ, அவருடைய பான் அல்லது ஆதார் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஆதார் அல்லது பான் எண் இல்லாமல், 20 லட்ச ரூபாய் கேஷாக எடுக்கவோ, செலுத்தவோ முடியாது.
இன்று முதல், மே 26 2022 முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது. வங்கிகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அஞ்சல் நிலையக் கணக்குகள், கோ-ஆப்பரேட்டிவ் வங்கிகள் என்று அனைத்துமே அடங்கும். இந்த விதிகள் அனைத்து வகையான வங்கிக் கணக்குகளுக்கும் பொருந்தும். கரண்ட் அக்கவுண்ட் என்ற நடப்புக் கணக்குக்கும் இந்த விதி பொருந்தும் என்பாதை சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு முன்பு ஒவ்வொரு முறை கேஷ் டெபாசிட் செய்யும் பொழுது டெபாசிட் தொகை ₹50,000க்கு அதிகமாக இருந்தால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் டெபாசிட் செய்வதற்கு அல்லது எடுப்பதற்கு ஒரு நிதியாண்டில் இவ்வளவு தான் என்று எந்த வரைமுறையும் இல்லை. அதுமட்டுமில்லாமல் மேற்கூறிய விதி குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட்டுக்கு மட்டும் தான் என்ற வரைமுறை இருந்தது.
Also Read : முதலுக்கே மோசம்... இன்சூரன்ஸ் விஷயத்தில் இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க!
வருமான வரி சட்டத்தின் கீழ் ஏற்கனவே பான் மற்றும் ஆதார் கணக்கை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. அதேபோல வங்கிகளும் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை அமல்படுத்திவிட்டது. இந்நிலையில் மோசடியான எந்த ஒரு பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல் தவிர்க்கத்தான் புதிய விதியையும் வருமான வரியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரிவு 139A வின் படி, பரிவர்த்தனைகளில் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் டிராக் செய்ய சாத்தியமில்லை என்பதால், குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளை சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ், அதாவது மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கொண்டு வருவதற்காக வலியுறுத்தப்பட்டது. எனவே, CBDT தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வருமான வரிச் சட்டம், பிரிவு 139A இல் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகாரம் செய்யும் நோக்கத்துக்காக, பான் அல்லது ஆதார் எண் மற்றும் பான் ஹோல்டரின் தனிநபர் தகவல் அல்லது தனிநபரின் பயோமெட்ரிக் தகவல் ஆகியவை வருமான வரி முதன்மை இயக்குநர் ஜெனரல் அல்லது வருமான வரி இயக்குநர் ஜெனரல் அல்லது வருமான வரி முதன்மை இயக்குநர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லது போர்டு ஒப்புதலுடன் வருமான வரி இயக்குநர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டது.
வங்கிக் கணக்கில் ₹20,00,000 க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் பொழுது அந்த குறிப்பிட்ட நபரிடம் பான் மற்றும் ஆதார் எண் வேண்டும். பரிவர்த்தனையின் பான் கட்டாயமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பரிவர்த்தனையை செய்ய விரும்பும் நபரிடம் PAN எண் இல்லையென்றால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ரொக்க பரிவர்த்தனைகளை ட்ரேஸ் செய்வதற்கும், மோசடியான பண வித்ட்ரா செய்யப்படுவதை தடுப்பதற்கும், பணம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும் இந்த புதிய கட்டுப்பாடு உதவும் என்று கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.