ஹோம் /நியூஸ் /வணிகம் /

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சீர்திருத்த அறிவிப்புகள் என்னென்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சீர்திருத்த அறிவிப்புகள் என்னென்ன?

அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தார்.

  இந்தியாவின் மோட்டார் வாகன உற்பத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகள், கடந்தாண்டு முதலே கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடும் தடுமாறி வருகிறது.

  இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும், நமது நாட்டின், பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இல்லை என தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் குறித்து பரவும் தகவல்கள் தவறானவை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

  அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் தடுமாறினாலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் 10க்கும் மேற்பட்ட சீர்திருத்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

  நாட்டின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

  பங்கு முதலீட்டாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட உபரி வரி ரத்து செய்யப்படுவதாகவும், தொழில் கடன்களை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில், அனைத்து ஆவணங்களையும் வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

  ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் வட்டி விகிதங்களோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், இதன்மூலம், வங்கிகளே, அவர்கள் வழங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

  வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் ஆகியனவற்றின் மீதான வட்டி விகிதங்கள் குறைவதால், கடன்பெற்றவர்களின் மாதத்தவணை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

  அனைத்து கடன் வாங்குபவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் எம்.சி.எல்.ஆர் வட்டி குறைப்பு முறைக்கு வங்கிகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. ரெப்போ விகிதங்களை வட்டி விகிதங்களுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் வீட்டுக் கடன்கள், வாகனங்கள் மற்றும் பிற சில்லறை கடன்களுக்கான ஈ.எம்.ஐக்கள் குறைக்கப்படும், ,"

  ஜி.எஸ்.டி வரி செலுத்துவோருக்கான மீதத்தொகை 60 நாட்களுக்குள் திருப்பி அளிக்க, தானியங்கி முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், தொழில் முனைவோருக்கான வரி விதிப்பு நீக்கப்பட்டு; முகமற்ற வருமான வரி ஆவணங்கள் பரிசீலனை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

  வருமானவரி செலுத்தாத நபர்களுக்கு வரும் அக்டோபர் 1 முதல் மின்னஞ்சல் மூலமே நோட்டீஸ் அனுப்பப்படும் என நிர்மலா கூறினார்.

  பெருநிறுவனங்கள் வழங்க வேண்டிய சமூக பொறுப்பு நிதியான சி.எஸ்.ஆர் நிதியை வழங்காவிட்டால், ஒருபோதும், குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றும், சிவில் சட்டப்படி மட்டுமே விளக்கம் கோரப்படும் என்றும் உறுதியளித்தார்.

  நிதி நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என்ற அவர், பி.எஸ்-4 வாகனங்கள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகும் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் கூறினார்.

  வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம், ஒருமுறைக்கு மேல், ஆதார் எண்களை கோரக் கூடாது என்றும், செல்வத்தை உருவாக்குபவர்களை தாங்கள் மதிப்பதாகவும் தெரிவித்தார்.

  பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

  Published by:Sankar
  First published:

  Tags: Minister Nirmala Seetharaman