கடந்த சில தினங்களாகத் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு கொண்டு இருக்கிறது. தங்கம் வெறும் அழகு ஆபரண பொருளாக மட்டும் இல்லாமல், பண முதலீட்டுப் பொருளாகவும் உள்ளது. வசதிக்கு ஏற்ற தங்க நகைகள் முதலீடுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அவசரக் கால சேமிப்பாகவும் தங்கம் கணக்கிடப்படுகிறது. எனவே, தங்க நகைகள் மேல் முதலீடு செய்யும் போது சில தவறுகளை நாம் செய்து விடக்கூடாது. தங்கம் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விவரங்கள் பற்றிப் பார்க்கலாம்.
சுத்தமான தங்கம்:
நாம் வாங்குகின்ற தங்கம் எவ்வளவு சுத்தமானது என்பது மிக முக்கியம். தங்கத்தின் சுத்தம் காரட் அளவுகளில் கணக்கிடப்படுகிறது. ஒரு காரட் அளவு 4.2 சதவீதம் ஆகும். ஆக, 24 காரட் தங்கம் என்பது 100 சதவீதம் சுத்தமானதாகும். ஆனால், 100 சதவீத சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது. ஆகவே தான் பெரும்பாலும் 22 காரட், அதாவது 92 சதவீத சுத்தமான தங்கத்தில் நகை செய்யப்படுகிறது. சிலர் 18 காரட் அளவிலும் கூட நகை செய்கின்றனர். ஆகவே நகை வாங்கும்போது 92 (91.6%) அளவிற்கான ஹால்மார்க் இருக்கிறதா என பார்ப்பது அவசியம்.
செய்கூலி:
தங்க நாணயங்கள் தவிர்த்து எந்தவொரு நகைக்கும் செய்கூலி உண்டு. நியாயமான அளவில் செய்கூலி செலுத்துவது அவசியம் தான். ஆனால், சில கடைகளில் அநியாயத்திற்கு செய்கூலி வசூலிப்பார்கள். அது நமக்கு நஷ்டம் ஆகும். ஆகவே, குறிப்பிட்ட அளவில் செய்கூலி வசூலிக்கக் கூடிய கடைகளில் நகை வாங்கலாம்.
தயாரிப்பு:
முன்பெல்லாம் நகைகள் கொல்லர்களால் தயாரிக்கப்பட்டது. இப்போதும் கூட அந்தப் பழக்கம் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தாலும், பெரும்பாலும் இயந்திர தயாரிப்பு தங்கம் தான் விற்பனைக்கு வருகிறது. அதே சமயம், இயந்திர தயாரிப்பு நகைகளுக்கு செய்கூலி சற்று குறைவாக இருக்கும்.
எடையை சரிபார்ப்பது:
தங்கம் வாங்கும்போது அதன் எடையை கணக்கீடு செய்வது மிக முக்கியம். சிலர் ஆடம்பரத்திற்காக கல் பதித்த நகைகளை வாங்குகின்றனர். ஆனால், அந்த கல்லின் எடைக்கும் சேர்த்து உங்களிடம் பணம் வசூல் செய்யப்படும். பெரும்பாலும் அந்த எடையை குறைக்க மாட்டார்கள். ஆகவே, கல் வைத்த நகையை வாங்க வேண்டுமா என்பதை சிந்தித்து கொள்ளுங்கள்.
விழாக்காலம்:
குறிப்பிட்ட சில விழாக்கால சமயங்களில் தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கும். ஆகவே, எந்த சீசனும் இல்லாத சமயத்தில் நகை வாங்கினால் விலை சற்று குறைவாக இருக்கலாம். பண்டிகைக்கால சலுகை விற்பனை என்ற பெயரில் விரிக்கப்படும் வலைகளில் விழுந்து விட வேண்டாம்.
திருப்பி வாங்குவது:
கடைகளில் நீங்கள் வாங்கும் தங்கத்தை, மீண்டும் வேறொரு நாளில் அதே எடைக்கு, அன்றைய நாள் விலை அடிப்படையில் மாற்றிக் கொள்ளும் முறை அமலில் இருக்கிறது. இதன்படி நீங்கள் எடைக்கு, எடை தங்கம் வாங்கலாம். கூடுதலாக இருக்கும் தங்கத்திற்கும், மேற்படி புதிய நகைக்கும் செய்கூலி செலுத்த வேண்டியிருக்கும். இதை கடையில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
தரமான கடை:
சில கடைகளில் தரம் குறைவான தங்கத்தை விற்பனை செய்யக் கூடும். சில கடைகளில் நகை உள்ளே அரக்கு அல்லது கம்பி போன்றவற்றை வைத்திருப்பார்கள். ஆகவே, பாரம்பரியம் மிகுந்த கடைகளில் நகை வாங்குவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.