பெட்ரோல், டீசல் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை அதிகரிப்பால் ஹோட்டல்களில் தேனீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 10 நாட்களாக தினந்தோறும் விலை உயர்வதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தக சிலிண்டரின் விலை புதன்கிழமை 40 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 240 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சிறிய டீக்கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாயை கடந்தது
சிலிண்டர் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து, தேனீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை ஏற்றத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பத்திரங்களை வழங்கியதே காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இது உண்மையல்ல என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் தேசிய அளவில் பட்டியலிடப்பட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காய்ச்சல், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்ற பொதுவான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால், அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது.
வாகனத் தயாரிப்புக்கான உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட முக்கிய உலோகப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதை அடுத்து வாகனங்களின் விலையை கார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு விலை இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வாகனங்களுக்கு பயன்படும் சிஎன்ஜி கேஸ், குழாய் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.