• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அவசர தேவைக்கு ரூ.50,000 முதல் 40 லட்சம் வரை கடன் தரும் வங்கிகள்... இந்த லோன் பற்றி தெரியுமா?

அவசர தேவைக்கு ரூ.50,000 முதல் 40 லட்சம் வரை கடன் தரும் வங்கிகள்... இந்த லோன் பற்றி தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

உங்கள் நிதி நெருக்கடியை போக்கும் அளவுக்கு தேவையான தொகையை, நீங்கள் கார் கடனைப் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் (NBFC) டாப்-அப் கடனைப் பெறலாம்.

  • Share this:
    ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு வகையான கடன்களை வழங்குகிறது. நீங்கள் ஏற்கனவே கார் கடன், வீட்டுக் கடன், போன்ற கடன்களை வாங்கியிருக்கலாம். திடீரென்று ஒரு பெரிய செலவு வந்தால், கூடுதல் பணம் தேவைப்படும் போது, பலரும் பலர் காரை விற்க முடிவு செய்கிறார்கள். கனவு காரை விற்பனை செய்து நிதி நெருக்கடியை தீர்க்க வேண்டிய சூழல் மிகவும் வருத்தத்திற்குறியது.

    ஆனால், உங்கள் அவசர நிதி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, மிக எளிய முறை உள்ளது. அதுதான் டாப்-அப் லோன் வசதி. பலருக்கும் கார் டாப் அப் லோன் பற்றி அதிகம் தெரியாது. இந்த வசதியின் மூலம், கடன் வாங்குபவர் எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடியை எளிதாக நீக்க முடியும். கார் டாப் அப் லோன் என்றால் என்ன, அது யாருக்குக் கிடைக்கும், எவ்வளவு தொகை கடனாக பெற முடியும் என்பது என்று பார்க்கலாம்.

    உங்களுக்குப் பிடித்தமான காரை வாங்குவதற்கு நீங்கள் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதன்பிறகு திடீரென்று வீட்டில் யாருக்கோ அல்லது உங்களுக்கோ உடல் நல பாதிப்பு வந்துவிட்டது, திடீரென்று திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது அல்லது வீட்டில் பெரிய பழுதுபார்ப்பு வேலைகள் நடக்க வேண்டும் போன்ற அவசர மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி எழும். 

    உங்கள் நிதி நெருக்கடியை போக்கும் அளவுக்கு தேவையான தொகையை, நீங்கள் கார் கடனைப் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் (NBFC) டாப்-அப் கடனைப் பெறலாம். அதே போல கார் டாப்-அப் கடன்களை வேறு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இருந்தும் பெறலாம். எனவே உங்கள் பிரச்சனை எளிதாகத் தீர்க்கப்படும். HDFC, Kotak Mahindra Bank, Axis Bank மற்றும் ICICI போன்ற வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களும் டாப்-அப் கடன்களை வழங்குகின்றன.

    உங்கள் தற்போதைய கார் கடனில் டாப்-அப் கடனைப் பெறுவதற்கான செயல்முறை மிக வேகமாக உள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவை. ஏற்கனவே உள்ள கார் கடன்களுக்கு கூடுதலாக, டாப்-அப் கடன்களை வழங்கும் வங்கிகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    டாப்-அப் கடனைப் பெறுவது மிகவும் எளிதானது. ஏற்கனவே உங்களைப் பற்றிய, கார் பற்றிய விவரங்கள் இருப்பதால், இந்த கடன் வழங்கும் செயல்முறை மிகவும் துரிதமாக்கப்படுகிறது. நீங்கள் கார் கடன் வாங்கிய அதே வங்கியில் டாப்-அப் கடன் வாங்கினால், செயல்முறை மேலும் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். ஏனெனில் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் ஏற்கனவே உங்களின் அனைத்து தகவல்களையும் வைத்திருக்கும்.

    HDFC வங்கியின் கார் டாப்-அப் கடன் :

    HDFC வங்கி அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை டாப்-அப் கடன்களை வழங்கும். இந்த வங்கியில் இருக்கும் கார் கடன் அதன் மதிப்பில் 150% வரை டாப்-அப் கடனைப் பெறலாம்.  டாப்-அப் கடனைப் பெற குறைந்தபட்சம் 9 மாதங்களுக்கு தெளிவான பேமெண்ட் செலுத்திய விவரங்கள் வைத்திருக்க வேண்டும். வங்கியில் இருந்து கிடைக்கும் டாப்-அப் கடன் தொகையானது உங்களின் தற்போதைய கார் கடனின் மதிப்பு, திருப்பிச் செலுத்தும் ஆவணங்கள், கார் வயது மற்றும் மாடல் போன்ற காரணிகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். நீங்கள் வேறொரு வங்கியில் கார் கடன் வாங்கியிருந்தாலும், HDFC வங்கி ஏற்கனவே உள்ள கார் கடனில் டாப்-அப் கடனை வழங்குகிறது. HDFC வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்பேங்கிங் கணக்குகளில் உள்நுழைந்து டாப்-அப் கடனைப் பெறலாம்.

    ஐசிஐசிஐ வங்கி கார் டாப்-அப் கடன் :

    ஐசிஐசிஐ வங்கி கார் டாப்-அப் கடனாக தொகை ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரை வழங்குகிறது. வீட்டைப் புதுப்பித்தல், தொழில் மேம்பாடு மற்றும் திருமணம் போன்ற கூடுதல் செலவுகளுக்கு ஐசிஐசிஐ வங்கியில் இருந்து கிடைக்கும் டாப்-அப் கடனைப் பயன்படுத்தலாம். டாப்-அப் லோன் செயல்முறை இந்த வங்கியில் மிக துரிதமானது மற்றும் இதற்கு குறைவான ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும். ஐசிஐசிஐ வங்கியில் கார் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இந்த கடனைப் பெறலாம். தற்போதுள்ள கார் கடன் வைத்திருப்பவர்களுக்கு,  ஐசிஐசிஐ வங்கி வழங்கும் டாப்-அப் கடன் 9.35 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் டாப்-அப் கடனுக்கு விண்ணப்பிக்கலாம், வாடிக்கையாளர் ஆதரவு உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு சென்று தகவல்கள் பெறலாம்.

    ஆக்சிஸ் வங்கி கார் டாப்-அப் கடன் :

    ஆக்சிஸ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட டாப்-அப் கடன் தொகை ரூ.50,000 முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கும். ஆக்சிஸ் வங்கியிடமிருந்து, காரின் உண்மையான மதிப்பில் 50% வரை உங்கள் தற்போதைய கார் கடனில் டாப்-அப் கடனாகப் பெறலாம். ஆக்சிஸ் வங்கி டாப்-அப் கடன் வட்டி 13.99% இல் தொடங்குகின்றது. ஏற்கனவே ஆக்சிஸ் வங்கி கார் கடனில் இருந்து, அதில் டாப்-அப் கடனாக பெற்றால், அதில் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 1 லட்சம். Axis வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் எந்த ஆவணங்களும் இல்லாமலே டாப்-அப் கடன்களில் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளைப் பெறலாம்.

    கோடக் மஹிந்திரா வங்கி கார் டாப்-அப் கடன் :

    கோடக் மஹிந்திரா வங்கி டாப்-அப் கடன்களாக ரூ.50,000 முதல் ரூ.15 லட்சம் வரை வழங்குகின்றன. இதற்கான வட்டி விகிதம் 10.99 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வசூலிக்கப்படுகின்றன. Kotak Mahindra வங்கி, கோடக் பிரைம் ட்ராக் ரெக்கார்டு (KPTR) மற்றும் Replace என்ற 2 தயாரிப்புகளின் கீழ் தனது கார் கடன் வாடிக்கையாளர்களுக்கு டாப்-அப் கடன்களை வழங்குகிறது. கோடக் ப்ரைம் ட்ராக் ரெக்கார்ட் லோன் ஆஃபரின் கீழ், சிறப்பாக கடன் தவனையைத் திருப்பிச் செலுத்தும் Kotak Mahindra Prime இன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டாப்-அப் கடன்கள் வழங்கப்படும். ரீப்ளேஸ் என்பது வாடிக்கையாளர்கள் தனிநபர் கடன் மற்றும் ரீஃபினான்ஸ் பலன்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க அனுமதிக்கும் கடன் சலுகையாகும். இது ஏற்கனவே உள்ள கார் கடனில் எளிதாக முன்-அங்கீகரிக்கப்பட்ட டாப்-அப் கடனை வழங்குகிறது. ஏற்கனவே உள்ள கார் கடனில் டாப்-அப் கடனைப் பெற, நீங்கள் கோடக் வங்கியில் கார் காடன் வாங்கி குறைந்தபட்சம் 12 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.

    எஸ்பிஐ வங்கி கார் டாப்-அப் கடன் :

    எஸ்பிஐ  வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் டாப்-அப் கடன்களை வழங்குகிறது. இது 12 சதவீதம் முதல் 14.75 சதவீதம் வரையில் தற்போது கடன் வழங்கப்படுகிறது. டாப்-அப் கடனாக, ரூ. 25,000 முதல் 15 லட்சம் வரை கடன் கிடைக்கும்.

    பேங்க் ஆஃப் பரோடா கார் டாப்-அப் கடன் :

    நகர்ப்புற பகுதியில் உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மற்றும் டவுன் மற்றும் கிராமப்புறங்களுக்கு ரூ. 50,000  ரூ.5 லட்சம் வரை கார் டாப்-அப் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி விகிதம் 11.70 சதவீதம் ஆகும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் காலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்

    கார் டாப்-அப் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

    1. பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு / ஓட்டுநர் உரிமம்


    2 மூன்று மாத சம்பள சீட்டு (நீங்கள் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தால்)

    1. வருமானத்தை நிரூபிக்கும் மூன்று மாத வங்கி அறிக்கை

    2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

    3. வாடகை ஒப்பந்தம், பாஸ்போர்ட், யுடிலிட்டி பில்


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: