தமிழகத்தில் ஊரடங்கால் ₹2,900 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு - பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

Youtube Video

தமிழகத்தில் 2 வார ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துவதன் மூலம் அரசுக்கு எத்தனை கோடி ரூபாய்  இழப்பு  ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் 2 வார ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 2,900 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில், இதனை கட்டுப்படுத்த 2 வார ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.  ஊரடங்கு  கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக   2,900 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.  ஊரடங்கு அமல்படுத்தப்படும் 15 நாட்களில் டாஸ்மாக் வருமானத்தில் 2,020 கோடியும், பத்திரப்பதிவுத்துறை அலுவலக வருவாயில் 500 கோடியும் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    கனிமங்கள் துறையில் மட்டும் 25 கோடி இழப்பு ஏற்படுமென அத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும், பெட்ரோல், டீசல் விற்பனை குறைவதன் மூலம் குறைந்தபட்சம் 356 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர்  எரிபொருள் விற்பனையாகும். ஊரடங்கு காரணமாக வீடுகளில் மக்கள் முடங்கி இருப்பதால், தற்போது ஒரு நாளைக்கு அதில் 20 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே விற்பனையாகிறது.

    மேலும் படிக்க..  கொரோனாவால் உயிரிழந்த தாயின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற மகன்

    வழக்கமாக அரசு வருமானத்தில் 60சதவீதம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியத்தோடு அரசு நிர்வாக செலவுகளுக்கும், மீதமுள்ள 40 சதவீதம் அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். ஆனால், கொரோனா அபாயம் சூழ்ந்திருக்கும் தற்போது அரசு, சுகாதாரத்துறைக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது.

    15 நாள் ஊரடங்கிற்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், மக்களிடம் பணப்புழக்கம் குறையுமென்பதால் மாநில அரசுக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு இல்லாத நிலையே காணப்படுகிறது.

    எனவே, நெருக்கடியை சமாளிக்க மதுபானங்களின் விலை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டாக மதுபானங்களின் விலை உயர்த்தப்படாத நிலையில், தற்போதைய சூழலில் விலை உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    First published: