GST Council Meeting : கொரோனா சிகிச்சைக்கான பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு: மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகைக்காக, மத்திய அரசே 1, 58,000 கோடி ரூபாயை கடனாக வாங்கி, மாநில அரசுகளுக்கு வழங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஜி.எஸ்.டி. 43வது கவுன்சில் கூட்டம் எட்டு மாதங்களுக்கு பின்னர் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில், மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.  தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்முறையாக ஜி,எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருத்துவப் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளும் வரிவிலக்கு பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சிகிச்சை கருவிகள் மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்துக்கும் ஜிஎஸ்டி வரி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு மறுக்கப் போவதில்லை எனவும், அடுத்த கட்டமாக ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி கடனாக பெற்று மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.

    மேலும் படிக்க... இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் 23% சரிவு- உலகச் சுகாதார அமைப்பு அறிக்கை

    சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்க, தாமதக் கட்டணத்தைக் குறைக்க பொது மன்னிப்பு திட்டம் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாவும், 2 கோடி ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள் வருடாந்திர வருவாய் தாக்கல் செய்வது, அவர்களின் விருப்பத்தின் பேரில் இருக்கலாம் என்ற திட்டம், நடப்பு நிதியாண்டிலும் தொடரும் எனவும், நிதியமைச்சர் தெரிவித்தார்.

    முன்னதாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் வரி விலக்கு கோரினார். நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் எனவும், மாநில அரசுகள் இன்றி ஒன்றிய அரசு இல்லை என்பதை உணர்ந்து செயல்படவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி முறையை முழுமையாக மாற்றியமைக்க, மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், தமிழக நிதியமைச்சர் பேசினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: