பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுகிறதா? - மத்திய அரசு முக்கிய முடிவு!

petrol diesel.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருப்பதால் இவற்றின் விலை விண்ணை முட்டும் வகையில் அதிகரித்துள்ளது.

  • Share this:
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் ஒரே வரி முறைக்குள் கொண்டு வரப்பட்டது. 0%, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 விதமான ஜிஎஸ்டி வரிகள் இதில் உள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள், விமான பெட்ரோல் போன்ற குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் பழைய வாட் வரி முறையிலேயே நீடித்தன.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருப்பதால் இதன் விலை விண்ணை முட்டும் வகையில் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்கு கொண்டுவர முடியும். அனைத்து மாநில நிதியமைச்சர்களும் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் தற்போது அதற்கு ஒரு சாத்தியக்கூறு தென்படுவது போல உள்ளது.

ஆம், வரும் வெள்ளிக்கிழமை ( செப் 17) அன்று நடைபெறவிருக்கும் 45வது மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நீண்ட கால பிரச்னை முடிவுக்கு வந்தால் அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைவார்கள். அதே நேரத்தில் இந்த முடிவால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த பேச்சுவார்த்தை எந்த வகையில் அமையும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Also Read:    பயன்படுத்திய போர்டு கார் வாங்குவது நல்லதா?

தற்போது பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருமானம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய அரசுக்கு 32 ரூபாய்க்கு மேல் எக்ஸைஸ் வரி செல்கிறது. ஜிஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலை கொண்டு வரப்பட்டால் 50:50 என்ற அளவில் மத்திய மாநில அரசுகள் லாபத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனா அத்யாவசிய பொருட்களுக்கான வரி தளர்வை நீட்டிப்பது குறித்து பேசப்படும், ஆனால் அதையும் கடந்து பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: