நாடு முழுவதும் விலைவாசி உயர்வு பிரச்னை சில மாதங்களாக காணப்பட்டுவரும் நிலையில், 143 பொருள்களின் வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விலை ஏறும் 143 பொருள்களில் 92 சதவீதப் பொருள்கள் 18 சதவீத வரியில் இருந்து 28 சதவீத வரிக்கு உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 143 பொருள்களில் வால்நட், குளிர்பானங்கள், கடிகாரம், சூட்கேஸ், ஹேன்ட் பேக், வாசனை திரவியம், பவர் பேங், 32 இன்ச்கும் குறைவான கலர் டிவி, சாக்லேட், செராமிக் சிங்குகள், வாஷ் பேசின்கள், சிவ்விங் கம்கள், கண்ணாடிகள் உள்ளிட்டவை அடக்கம்.
அப்பளம் மற்றும் வெல்லம் ஆகியவற்றுக்கு இதுவரை வரி ஏதும் இல்லாத நிலையில், தற்போது இவற்றுக்கு 5 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வால்நட்டிற்கு 5 சதவீதம் வரி இருந்த நிலையில், தற்போது அதை 12 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய நான்கு நிலைகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இதில் 70 சதவீத ஜிஎஸ்டி வசூல் 18 சதவீத ஸ்லாப்பில் இருந்து வருகிறது. 480 பொருள்களுக்கு 18 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட நிலையில், இதற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீட்டு தொகை வழங்கிவருகிறது. மத்திய அரசு வழங்கும் இந்த ஐந்து ஆண்டு இழப்பீடு வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.
மாநில அரசுகளின் வருவாய் இதன் மூலம் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாநில அரசுகள் மத்திய அரசை சாராமல் வருவாயை உயர்த்தவே வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.