2022 ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,67,540ஆக உச்சம் தொட்டுள்ளது. ஒரு மாதத்தில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச ஜிஎஸ்டி தொகை இதுவே. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி வசூலான நிலையில், அதை விட ஏப்ரல் மாதத்தில் ரூ.25,000 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,67,540 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.33,159 கோடி, மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.41,793 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.81,939 கோடி, செஸ் வரி ரூ.10,649 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், அமைச்சகத்தின் தொடர் முயற்சியால் வரி செலுத்துவோர் உரிய காலத்தில் முறையாக வரி செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் முதல்முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் காலத்தை ஒப்பிடுகையில் 2022 ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், இறக்குமதி பொருள்கள் மூலம் வரி வருவாய் 30 சதவீதமும், உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமான வரி வருவாய் 17 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:
பதற்றம் தரும் பாமாயில் விலை.. அதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
மேலும், 2022 பிப்ரவரி மாதத்தில் 6.8 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அது மார்ச் மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்து 7.7 கோடி பில்களாக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக ஜிஎஸ்டி வசூல் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ரூ.27,495 கோடி வசூலாகியுள்ளது. அடுத்ததாக கர்நாடகாவில் ரூ.11, 820 கோடியும், குஜராத்தில் ரூ.11,264 கோடியும் வசூல் ஆகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.